சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கிய விவகாரத்தில் கவர்னர் தலையீடு! அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை செயலருக்கு உத்தரவு
சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கிய விவகாரத்தில் கவர்னர் தலையீடு! அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை செயலருக்கு உத்தரவு
சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கிய விவகாரத்தில் கவர்னர் தலையீடு! அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை செயலருக்கு உத்தரவு
ADDED : ஜூலை 23, 2024 11:41 PM

பெங்களூரு : முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மனை ஒதுக்கிய விவகாரத்தில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில தலைமைச் செயலர் ரஜ்னீஷ் கோயலுக்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 2021ல் 14 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மனைவி என்பதால், தங்களுக்கு சாதகமாக சித்தராமையா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ., - ம.ஜ.த., குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், தன் மனைவிக்கு அவரது சகோதரர் தானமாக வழங்கியதாக முதல்வர் பதில் அளித்தார்.
ஒரு நபர் கமிட்டி
இந்த முறைகேட்டை கண்டித்து, மைசூரு, பெங்களூரில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இதற்கு, பா.ஜ.,வினர் அரசியல் ரீதியாக போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், 'மூடா' முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.தேசாய் தலைமையிலான ஒரு நபர் கமிட்டியை, மாநில அரசு, இம்மாதம் 14ம் தேதி அமைத்தது. ஆறு மாதங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் மீதே முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், 'மூடா' முறைகேடு விஷயத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், திடீரென தலையிட்டுள்ளார்.
சட்ட வல்லுனர்கள்
முதல்வர் மனைவிக்கு மனைகள் ஒதுக்கியது; முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு; விசாரணை கமிட்டி ஆகியவை குறித்து முழு விபரங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி, மாநில தலைமைச் செயலர் ரஜ்னீஷ் கோயலுக்கு, கவர்னர் கடிதம் எழுதி உள்ளார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த 187 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என, ஏற்கனவே எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது, 'மூடா' முறைகேட்டில் கவர்னரே நேரடியாக தலையிட்டுள்ளதால், முதல்வருக்கு சிக்கல் ஏற்படுமா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து, சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தகவல் பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த நாட்களில் என்னென்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.