விசாரணையில் குறுக்கிட்ட வக்கீல்: கடுப்பாகி எச்சரித்த தலைமை நீதிபதி
விசாரணையில் குறுக்கிட்ட வக்கீல்: கடுப்பாகி எச்சரித்த தலைமை நீதிபதி
விசாரணையில் குறுக்கிட்ட வக்கீல்: கடுப்பாகி எச்சரித்த தலைமை நீதிபதி
ADDED : ஜூலை 23, 2024 11:57 PM

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து குறுக்கிட்டு இடையூறு செய்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பராவை, அறையில் இருந்து வெளியேற்றும்படி, காவலர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்களில் ஒருவருக்காக வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா ஆஜரானார். மற்றொரு மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் நரேந்திர ஹூடா பேசும் போது, மேத்யூஸ் இடைமறித்து பேசினார்.
அப்போது, ஹூடாவுக்கு அடுத்து பேசுமாறு மேத்யூசை தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்வருமாறு:
மேத்யூஸ்: நான் தான் இங்கு மூத்த வழக்கறிஞர்; நான்தான் பேசுவேன்.
சந்திரசூட்: நான் உங்களை எச்சரிக்கிறேன். நீதிபதிகளிடம் இவ்வாறு பேசக்கூடாது; இந்த நீதிமன்றத்துக்கு நான்தான் பொறுப்பு. காவலர்களே! இவரை இங்கிருந்து அகற்றுங்கள்.
மேத்யூஸ்: நானே இங்கிருந்து செல்கிறேன்.
சந்திரசூட்: நீங்கள் அதை சொல்ல வேண்டியதில்லை; நீங்கள் செல்லலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித் துறையை பார்த்து வருகிறேன். இந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது.
மேத்யூஸ்: நான், 1979ம் ஆண்டில் இருந்தே பார்த்து வருகிறேன்.
சந்திரசூட்: மற்றொரு வழக்கறிஞர் பேசும் போது நீங்கள் குறுக்கிட முடியாது. இனியும் அதுபோல் தொடர்ந்தால், கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
இதையடுத்து, மேத்யூஸ் நெடும்பரா நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார். சிறிது நேரத்துக்கு பின் அறைக்கு திரும்பிய மேத்யூஸ், தலைமை நீதிபதியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரினார்.
பின்னர் பைபிளில் உள்ள வசனத்தை மேற்கொள்காட்டி, “பரலோக பிதாவே, நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு அநீதி இழைக்கப்பட்டது. அவர்கள் தெரியாமல் செய்த தவறை மன்னியுங்கள்,” என்றார்.
வழக்கு விசாரணையின் போது, இது போல் குறுக்கிடுவது மேத்யூசுக்கு புதிதல்ல. கடந்த ஆண்டு மார்ச்சில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது குறுக்கிட்டு பேசிய அவரை, தலைமை நீதிபதி கண்டித்துள்ளார்.