
கனமான கதாபாத்திரம்
நடிகர் ரங்காயணா ரகு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும், ஷாகாஹாரி திரைக்கு வர தயாராகிறது. படத்தின் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், ''சஸ்பென்ஸ், கிரைம் கதை கொண்டதாகும். அப்பாவி ஒருவனை, எதிர்பாராத சம்பவங்கள் எப்படி குற்றவாளி ஆக்குகின்றன. தன்னை காப்பாற்றி கொள்ள போராடுவதே கதை. தீர்த்தஹள்ளி சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வில்லனாக, துணை நடிகராக, காமெடியன் என, பல கதாபாத்திரங்களில் திறமையை காண்பித்த ரங்காயணா ரகு, ஷாகாஹாரி படத்தில், ஹோட்டல் சமையல்காரராக நடிக்கிறார். இதில் அவருக்கு கனமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது,'' என்றனர்.
கற்பனை கதை
ரகு ஆச்சார், ஹயக்ரீவா என்ற படத்தை இயக்குகிறார். உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், தற்போது இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதில் சஞ்சனா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். படம் பற்றி, அவரிடம் கேட்ட போது, ''படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதிநவீன காலத்தில், புராணங்கள், குற்றங்களை மையமாக கொண்டு திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. அடுத்த 40 ஆண்டுகளில் நடக்கும் கற்பனை கதையாகும். காதல், குடும்ப சென்டிமென்ட் என, அனைத்து அம்சங்களும் அடங்கிய, பொழுது போக்கு படமாகும்,'' என்றார்.
நடிப்புடன் படிப்பு
தற்போது திரையுலகில் நுழையும் பலரும், நன்கு படித்தவர்கள். புதுமுக நடிகை பிரணதியும், எம்.சி.ஏ., படித்தவர், ஜஸ்ட் பாஸ் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
இது குறித்து, பிரணதி கூறுகையில், ''இது என் முதல் சினிமா. பெங்களூரை சேர்ந்த நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன். 2023ல் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. நான் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் போது, ஸ்ருதி நாயுடுவுடன் சின்னத்திரை தொடரில் எனக்கு சிறிய கதாபாத்திரம் கிடைத்தது. அதன்பின் நடிப்புடன், படிப்பையும் தொடர்ந்தேன். பட்டப்படிப்பு படிக்கும் போது, நடிப்பை நிறுத்தி வைத்தேன். என் கவனம் படிப்பின் மீதே இருந்தது. எம்.சி.ஏ., கடைசி ஆண்டு படிக்கும் போது, சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இனி படங்களில் நடிப்பேன்,'' என்றார்.
பொழுது போக்கு
நடிகை சங்கீதா சிருங்கேரி நாயகியாக நடிக்கும் மேரிகோல்டு படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது.
படத்தின் கதை குறித்து, சங்கீதாவிடம் கேட்ட போது, ''முதன் முறையாக திகந்துக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் என்னை மிகவும் அழகாக காண்பித்துள்ளார். சிறந்த பொழுது போக்கு படமாகும். சித்ரதுர்கா, பெங்களூரு, சக்லேஸ்புரா உட்பட, பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். விரைவில் திரைக்கு வரும்,'' என்றார்.
காதலர்களுக்கான படம்
காதலர் தினம் கொண்டாடும் நேரத்தில், காதலர்களுக்காகவே பிரணயம் திரைக்கு வருகிறது. காதல் மட்டுமின்றி, ஹாரர், திரில்லர், குடும்ப சென்டிமென்டும் கலந்துள்ளது.
இது பற்றி படக்குழுவினர் கூறுகையில், ''நிச்சயதார்த்தம், திருமணம், கூட்டு குடும்பம் என, அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் நாயகன் ராஜவர்தன் அசத்தியுள்ளார். நாயகி நைனா கங்கூலி கிளாமராக நடித்துள்ளார். மொத்தத்தில் காதலர்கள் விரும்பி பார்க்கும் கதையாகும்,'' என்றனர்.