ராஜினாமா செய்ய முடியாது என முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!
ராஜினாமா செய்ய முடியாது என முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!
ராஜினாமா செய்ய முடியாது என முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!
ADDED : ஜூலை 23, 2024 06:18 AM

பெங்களூரு: “எனக்கும், எந்த முறைகேட்டுக்கும் தொடர்பும் இல்லை. இத்தகைய நிலையில் நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?” என, மேலவையில் முதல்வர் சித்தராமையா கூறினார். இதன் வாயிலாக, வால்மீகி ஆணையம், 'மூடா' ஊழல் விவகாரத்தில் தன்னிடம் ராஜினாமா கேட்கும் எதிர்க்கட்சிகளுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
கர்நாடகா வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு, 'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணைய முறைகேடு ஆகிய இந்த இரண்டு முறைகேடுகளையும் அஸ்திரமாக பயன்படுத்தி, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசை எதிர்க்கட்சிகள் திணறடிக்கின்றன.
கடந்த வாரம் முழுதும், வால்மீகி ஆணைய முறைகேடு தொடர்பாக, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணா நடத்தினர். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபையில் முதல்வர் நீண்ட விளக்கம் அளித்தார்.
ஆனாலும் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். நேற்று கர்நாடக மேலவையில் முதல்வரிடம் ராஜினாமா கேட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:
முதல்வர் சித்தராமையா: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டுக்கும் எனக்கும், எந்தத் தொடர்பும் இல்லை. எதிர்க்கட்சியினர் என்னிடம் ராஜினாமா கேட்பது, எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. எந்த முறைகேட்டிலும், எனக்கு தொடர்பு இல்லாத நிலையில், நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?
முதல்வரின் பதிலால் அதிருப்தி அடைந்த, பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள், முதல்வரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், அவையில் கூச்சல், குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
பா.ஜ., - ரவி: முறைகேடு நடந்தது என்பது பொய்யா? அப்படி என்றால் நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல் விசாரணையை எதிர்கொண்டது பொய்யா?
பா.ஜ., - ரவிகுமார்: ஊழல் நடக்கவில்லை என, சபைக்கு முதல்வர் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். அவரது நிலையை கண்டால், இயலாமையில் இருப்பது தெரிகிறது. எனவே அமைச்சர்களும், உறுப்பினர்களும் நிற்கின்றனர்.
முதல்வர்: பேசாமல் அமருங்கள். எனக்கும் தெரியும். என் கவனத்தை திசை திருப்ப பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர். இப்போது நான் என்ன சொன்னேன் என்பதே மறந்துவிட்டது.
முறைகேடு குறித்து விசாரணை நடக்கிறது. யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை கிடைக்கும். உப்பு தின்றவர் தண்ணீர் குடிப்பர். முறைகேட்டில் தொடர்புள்ளவர்களுக்கு, சட்டத்தின் மூலமாகவே தண்டனை கொடுப்போம். யாரையும் காப்பாற்றுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பா.ஜ.,வினர் ஒரு பொய்யை 100 முறை சொல்லி, உண்மையாக்க முயற்சிக்கின்றனர்.
இதற்கு பா.ஜ.,வினர் ஆட்சேபம் தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் காரசார வாக்குவாதம் நடந்தது. யார் என்ன பேசினர் என்பதே தெரியவில்லை.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள், 'முதல்வர் பேசும்போது இடையூறு ஏற்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை, சபையில் இருந்து வெளியேற்றுங்கள்' என, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் சபையில் குழப்பம் மேலும் அதிகரித்தது.
எழுந்து நின்ற பசவராஜ் ஹொரட்டி: குறைந்தபட்சம் எனக்காவது மரியாதை கொடுத்து, இருக்கையில் அமருங்கள்.
முதல்வர்: என் முகத்தில் கரியை பூச வேண்டும், எங்கள் அரசு எஸ்.சி., - எஸ்.டி.,யினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக உள்ளதாக, தோற்றத்தை ஏற்படுத்த பா.ஜ, முயற்சிக்கிறது.
இவர்கள் எப்போதும் சமூக நியாயத்துக்கு ஆதரவாக இருந்தது இல்லை. அரசியல் சாசனத்தை எதிர்த்தவர்கள்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்காக திட்டம் கொண்டு வந்தது நாங்கள். பா.ஜ., அரசு இருந்தபோது, இந்த சட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை? மத்தியில் உங்களின் மோடி அரசிடம், சட்டத்தை அமல்படுத்தும்படி நெருக்கடி கொடுங்கள். அம்பேத்கரின் விருப்பப்படி, எங்கள் அரசு நடந்து கொள்கிறது.
ரவிகுமார்: நாங்கள் எஸ்.சி., பிரிவினருக்கு எதிரி இல்லை. நீங்கள் இந்த சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்தினீர்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.