பா.ஜ., - எம்.பி., வெற்றிக்கு வாழ்த்து: மூத்த தலைவர் பேச்சால் காங்., அதிர்ச்சி
பா.ஜ., - எம்.பி., வெற்றிக்கு வாழ்த்து: மூத்த தலைவர் பேச்சால் காங்., அதிர்ச்சி
பா.ஜ., - எம்.பி., வெற்றிக்கு வாழ்த்து: மூத்த தலைவர் பேச்சால் காங்., அதிர்ச்சி
ADDED : ஜன 27, 2024 11:56 PM

ஷிவமொகா: கர்நாடகாவில், பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவை, மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் சிவசங்கரப்பா சலசலப்பை ஏற்படுத்தினார். இது, காங்., தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு காங்கிரஸ் கட்சியினர் லோக்சபா தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
காங்கிரஸ் கடந்த முறை வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இம்முறை குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான முயற்சியிலும் இறங்கிஉள்ளது.
இந்நிலையில், ஷிவமொகாவில் நேற்று மூத்த தலைவர் சிவசங்கரப்பா கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா வெற்றி பெற வேண்டும்.
இவரை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமை. ஷிவமொகா மாவட்ட மக்கள், சிறப்பான எம்.பி.,யை தேர்வு செய்துள்ளனர். பல வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன.
மக்களின் எதிர்பார்ப்பின் படி, மாவட்டத்தில் ராகவேந்திரா பல வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ராகவேந்திராவை, மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவசங்கரப்பாவின் வாழ்த்து காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகவேந்திரா, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பாவின் மகன்.