சிறப்பாக செயல்படும் ஆசிய நாணயங்கள்: 2வது இடத்தில் இந்திய ரூபாய்
சிறப்பாக செயல்படும் ஆசிய நாணயங்கள்: 2வது இடத்தில் இந்திய ரூபாய்
சிறப்பாக செயல்படும் ஆசிய நாணயங்கள்: 2வது இடத்தில் இந்திய ரூபாய்
ADDED : ஜூன் 22, 2024 06:19 AM

புதுடில்லி: ஆசியாவிலேயே சிறப்பாகச் செயல்படும் நாணயங்களின் பட்டியலில், இந்திய ரூபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஹாங்காங் டாலர் உள்ளது.
சமீப நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சரிவை சந்தித்து வரும் நிலையிலும், மற்ற ஆசிய கரன்சிகளை விட சிறப்பான நிலையில் உள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 83.55 ஆக இருந்தது.
சரிவு
நடப்பாண்டில் இதுவரை ஹாங்காங் டாலரைத் தவிர, அனைத்து ஆசிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் சரிவையே கண்டுஉள்ளன. முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலர்களை அதிகளவு வாங்கி வருவதால், அதன் மதிப்பு 3.31 சதவீதம் அதிகரித்து உள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு 0.45 சதவீதம் குறைந்துள்ளது. ஒருபுறம் இம்மாத இறுதியில், மத்திய அரசின் கடன் பத்திரங்கள், ஜே.பி.மார்கன் கடன் பத்திரக் குறியீட்டில் இணைக்கப்பட உள்ளதால், மற்றொரு புறம் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.
எனினும், ஜே.பி.மார்கனின் முடிவைத் தொடர்ந்து, இதுவரை நம் நாட்டு கடன் பத்திரங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்; இதுவே ரூபாய் மதிப்பு சரிவை குறைத்துஉள்ளதாகவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நாட்டின் வர்த்தக செயல்பாடுகள், ரிசர்வ் வங்கியின் தலையீடு ஆகியவை, ரூபாய் மதிப்பை பாதுகாக்க உதவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
![]() |
எதிர்பார்ப்பு
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு; அந்நாட்டின் கடன் பத்திரங்களின் வருவாய் உயர்வு; கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவை, ரூபாயின் மதிப்பு சரிய காரணங்களாக கூறப்படுகின்றன.
விரைவில் வெளிவரவுள்ள அமெரிக்க வேலையின்மை தரவுகள்; வட்டியை குறைப்பது குறித்த அந்நாட்டு பெடரல் வங்கியின் முடிவு; இந்தியாவில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் ஆகியவையே, எதிர் வரும் காலத்தில் ரூபாயின் செயல்பாட்டை நிர்ணயிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.