சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி அடிப்படை வசதிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி அடிப்படை வசதிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி அடிப்படை வசதிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 22, 2024 05:00 AM

மைசூரு, : ''சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமைகள், அம்மன் பிறந்த நாள் விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்,'' என மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மைசூரு மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் கலெக்டர் ராஜேந்திரா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆடி மாதத்தை ஒட்டி, ஜூலை 12, 19, 26, ஆக., 2 ஆகிய ஆடி வெள்ளிக் கிழமைகளிலும், ஜூலை 27ல் சாமுண்டீஸ்வரியின் பிறந்த நாளன்றும், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இது தொடர்பாக, ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் மக்கள் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தப்படும்.
சாமுண்டி மலையில் அன்னதானம் வழங்கப்படும். பிரசாதம் வினியோகிக்கப்படும். இது தவிர, பல்வேறு இடங்களில் பக்தர்களும் பிரசாதம் வழங்குவர். இதை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
பக்தர்களுக்கு குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் சீராக செயல்படுத்த வேண்டும். சாமுண்டி மலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவில் வளாகத்தில் துாய்மையை கடைப்பிடிக்க வேண்டும். நடமாடும் கழிப்பறை ஏற்பாடு செய்யப்படும். சாமுண்டி மலையில் போதுமான அளவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.
மலையில் பிளக்ஸ் பேனர்கள் எதுவும் வைக்க கூடாது. யாருக்கும் 'பாஸ்' முறை இல்லை. அனைவருக்கும் அம்மன் தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.