பாக்., உளவாளியாக இருந்த 'பெல்' இன்ஜினியர் கைது
பாக்., உளவாளியாக இருந்த 'பெல்' இன்ஜினியர் கைது
பாக்., உளவாளியாக இருந்த 'பெல்' இன்ஜினியர் கைது
ADDED : மார் 21, 2025 12:09 AM

பெங்களூரு: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட, பெங்களூரு, 'பெல்' நிறுவன மூத்த இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் கார்வாரில் உள்ள, 'சீ பேர்டு' கடற்படை தளம் பற்றிய தகவல்களை, பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக அங்கு பணியாற்றிய தற்காலிக ஊழியர்களான வேதன் தண்டேல், அக் ஷய் நாயக் ஆகியோரை என்.ஐ.ஏ., இரு மாதங்களுக்கு முன் கைது செய்தது.
இந்நிலையில், இந்திய ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடந்த 14ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ரவீந்திர குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். குமார் விகாஷ் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
குமார் விகாஷிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரு பெல் நிறுவனத்தில் தயாரிப்பு, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு துறையில் மூத்த இன்ஜினியராக பணியாற்றும் உத்தர பிரதேசத்தின் தீப்ராஜ் சந்திரா, 36, என்பவரும் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, பெங்களூரு மத்திகெரேயில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் இரவு, தீப்ராஜ் சந்திராவை ராணுவ புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
விசாரணையில், நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியங்கள், விண்வெளி ஆய்வு தொடர்பான சில தகவல்களை பாகிஸ்தானுக்கு தீப்ராஜ் கொடுத்தது தெரிந்தது.
இதற்காக, பாகிஸ்தானிடம் இருந்து பிட்காயின் மூலம் பணம் வாங்கியதும் தெரியவந்தது. இவரிடம் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பேச்சு நடத்தி, தகவல்களை கறந்ததும் தெரிந்தது.
இவர்கள், பாகிஸ்தான் பெண்ணிடம், 'ஹனிடிராப்'பில் சிக்கி இருக்கலாம் என்றும், இதனால், நம் நாட்டின் ரகசியங்களை கசியவிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.