பங்கு சந்தையில் அதிக முதலீடு: மத்திய அரசு எச்சரிக்கை
பங்கு சந்தையில் அதிக முதலீடு: மத்திய அரசு எச்சரிக்கை
பங்கு சந்தையில் அதிக முதலீடு: மத்திய அரசு எச்சரிக்கை
ADDED : மார் 21, 2025 12:02 AM

புதுடில்லி: மக்கள் தங்களுடைய வங்கி முதலீடுகளை, பங்குச் சந்தைக்கு மாற்றுவது ஆபத்தாக அமைந்து விடும் என, மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.
பட்ஜெட் மானிய கோரிக்கைகள் தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழு அறிக்கை பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது.
அதில், கூறப்பட்டுஉள்ளதாவது:
கட்டுப்பாடு இல்லை
மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைத் துறை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள தகவல்களில், மக்கள் தங்களுடைய வங்கி முதலீடுகளை பங்குச் சந்தைக்கு மாற்றுவது என்பது அவர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிக வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மக்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால், முறையான ஆய்வுகள் செய்யாமல் செய்வதால், இழப்புகளை அவர்கள் சந்திக்கக நேரிடுகிறது.
அதுபோல மக்கள் செய்யும் முதலீடுகள் தான், வங்கிகளுக்கு கிடைக்கும் சுலபமான நிதி ஆதாரமாகும். மக்கள் முதலீடுகள் குறைந்துவிட்டால், வங்கிகளுக்கு அது சவாலாக அமைந்துவிடும். இது பணப்புழக்கத்தையும் குறைத்துவிடும்.
மக்களின் முதலீடு குறைவது, வங்கிகளின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். பணப் புழக்கத்தை நிலையாக வைத்திருக்க, மக்களை ஈர்க்கக் கூடிய கவர்ச்சிகரமான திட்டங்கள் தேவை.
'இன்சூரன்ஸ்' எனப்படும் காப்பீட்டுத் துறையில், அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், பல கட்டுப்பாடுகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கிடைக்கும் லாபத்தை இந்தியாவிலேயே அந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய நிபந்தனைகள் விதிக்க வேண்டும். அதுபோல மக்களுக்கு, காப்பீட்டு தொகை விரைவாக கிடைப்பதற்கான நிதி ஆதாரங்கள் இருப்பது போன்றவற்றிலும் கவனம் தேவை.
தீர்வு தேவை
ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர் திட்டத்தின் கீழ் பெறும் புகார்கள் எண்ணிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில், 50 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2023 - 2024 நிதியாண்டில் மட்டும், 9,34,000 புகார்கள் வந்துள்ளன. இவற்றுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் தேவை.
அனைவருக்கும் வங்கி சேவை கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம். ஆனால், இது வெறும் பெயரளவில் இல்லாமல், பயன்படுத்தப்படாமல் முடங்கி இருப்பதை தடுக்க வேண்டும்.
எப்போதும் அந்தக் கணக்குகள் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு அந்த திட்டத்தில் உள்ள குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.