இடுக்கியில் ஜன.9ல் பந்த் அறிவிப்பு: கேரள அரசு - கவர்னரிடையே வலுக்கும் மோதல்
இடுக்கியில் ஜன.9ல் பந்த் அறிவிப்பு: கேரள அரசு - கவர்னரிடையே வலுக்கும் மோதல்
இடுக்கியில் ஜன.9ல் பந்த் அறிவிப்பு: கேரள அரசு - கவர்னரிடையே வலுக்கும் மோதல்
ADDED : ஜன 06, 2024 09:34 PM
மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் கவர்னரை கண்டித்து ஜன.9ல் ஆளும் இடது சாரி கூட்டணியினர் 'பந்த்' நடத்துவதால் கேரள அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் ஆட்சி நடக்கிறது.
செப்., 1960 நில பதிவு சட்டத்தில் திருத்தம் செய்து அரசு சார்பில் சட்டசபையில் தாக்கல் செய்த மசோதாவை கவர்னர் ஆரிப்முகம்மதுகான் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அவர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் ஏற்பட்டு வருவதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த இளைஞர், மாணவர் அமைப்பினர் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி கண்பித்து உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
முற்றுகை அறிவிப்பு
கேரளாவில் மற்ற பகுதிகளை விட இடுக்கி மாவட்டத்தில் நிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் நிலம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தி வரும் கவர்னரை கண்டித்து இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த இடது சாரி கூட்டணியினர் ஜன.9ல் திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதே நாளில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கேரள வியாபாரி, விவசாயி எனும் வர்த்தகம் சங்கம் சார்பில் நடக்கும் நிகழ்சியில் கவர்னர் பங்கேற்கிறார்.
அவர் போராட்டம் நடத்தும் நாளில் இடுக்கி மாவட்டத்திற்கு வருவதை ஆளும் இடது சாரி கூட்டணியினர் விரும்பவில்லை. அவர் வருவதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் ஜன.9ல் பந்த் நடத்த அழைப்பு விடுத்ததால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.