Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அயோத்தி ராமர் கோவிலில் தகதகவென மின்னும் தங்க கதவுகள்

அயோத்தி ராமர் கோவிலில் தகதகவென மின்னும் தங்க கதவுகள்

அயோத்தி ராமர் கோவிலில் தகதகவென மின்னும் தங்க கதவுகள்

அயோத்தி ராமர் கோவிலில் தகதகவென மின்னும் தங்க கதவுகள்

ADDED : ஜன 10, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
அயோத்தி: உத்தர பிரதேசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கருவறைக்கான தங்க தகடுகள் போர்த்தப்பட்ட பிரதான வாயிற்கதவு நிறுவப்பட்டது தொடர்பான புகைப்படங்களை கோவில் அறக்கட்டளை வெளியிட்டது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமருக்கான பிரமாண்ட கோவில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 70 ஏக்கர் பரப்பளவில் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டு வரும் கோவிலின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இதையடுத்து, வரும் 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், கோவில் கருவறையின் நுழைவாயில் கதவுகள் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டன.

இந்தக் கதவு 12 அடி உயரத்தில், 8 அடி அகலத்தில் தேக்கு மரத்தில் செய்யப்பட்டு தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டனர்.

தகதகவென மின்னும் கதவின் இருபுறமும் தோரண வாயில் நடுவே கம்பீரமாக நின்று வரவேற்கும் யானைகளும், அதன் மேலே அரண்மனை தர்பாரில் கைகட்டி பவ்யமாக நிற்கும் சேவகர்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

கதவின் அடிப்பகுதியில் உள்ள நான்கு சதுரங்களில் அழகான கலைப்படைப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது:

அடுத்த சில நாட்களில் மேலும் 13 கதவுகள் பொருத்தப்பட உள்ளன. தங்கக் கதவுகள் அனைத்தும் கருவறை அமைந்துள்ள மேல்தளத்தில் பொருத்தப்பட இருக்கின்றன.

கோவில் முழுதும் 46 கதவுகள் பொருத்தப்பட உள்ளன. இவற்றில் 42 கதவு கள் 100 கிலோ தங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தங்க தகடுகளால் போர்த்தப்பட்டுஉள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முழுவீச்சில் தயாராகி வரும் கோவிலின் கதவுகள் செய்யும் தச்சர்கள் தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கேயே தற்காலிக முகாம் அமைத்து கோவிலுக்கான கதவுகளை உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

இரும்பு இல்லாமல் கற்களால் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் நுழைவுவாயிலில், யானைகள், சிங்கம், ஹனுமன், கருடன் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு, நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபை மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை மண்டபங்கள் என ஐந்து மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

குவியும் பரிசுகள்!

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பரிசுப் பொருட்கள் அயோத்தி கோவிலில் குவிந்து வருகின்றன. குஜராத்தின் வதோதரா நகரில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள ஊதுவத்தி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 3,610 கிலோ எடையும், மூன்றரை அடி அகலமும் உடைய சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த வாசனை ஊதுவத்தி, வரும் 18ம் தேதி அயோத்தி வந்தடைகிறது. அதேபோல், உ.பி., அலிகாரைச் சேர்ந்த பூட்டு தொழிலாளி சத்ய பிரகாஷ் சர்மா, 10 அடி உயரம், 4.6 அடி அங்குலம், 400 கிலோ எடை உடைய பூட்டு மற்றும் சாவியை தயார் செய்துள்ளார். அதே மாநிலத்தின் ஜலேசரில் தயாரிக்கப்பட்ட 2,400 கிலோ எடை உடைய ராட்சத மணி, அயோத்திக்கு ரயில் வாயிலாக அனுப்பப்பட்டுஉள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மணியான இது, அடித்தால் சுற்றியுள்ள 2 கி.மீ., துாரத்துக்கு அதன் சத்தம் கேட்கும் என கூறப்படுகிறது. இந்தியா, ஜப்பான், ரஷ்யா, சீனா உட்பட எட்டு நாடுகளின் நேரத்தை ஒரே சமயத்தில் காட்டும் பிரமாண்ட கடிகாரமும், உத்தர பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த காய்கறி வியாபாரியால் பரிசளிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us