ADDED : மார் 21, 2025 12:11 AM

நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு எதிராக பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மியினர் கைகோர்த்து உள்ளது போல் தெரிகிறது. மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்து, பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு தடுத்து நிறுத்தியது. தற்போது அந்த போராட்டத்தை இரு கட்சிகளும் இணைந்து நீர்த்துப் போகச் செய்துவிட்டன.
மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்
தேசதுரோகிகள்!
நம் நாட்டின் மீது படையெடுத்த முகலாயர்களை புகழ்வது தேசதுரோகம். நம் முன்னோர்களை அவமதித்து, நம் கலாசாரம், பண்பாடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவர்கள். பெண்களை இழிவுபடுத்தியவர்கள். நம் நம்பிக்கைக்கு எதிரானவர்கள். முகலாயர்களை புகழ்வோரை புதிய இந்தியா ஏற்காது.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
வங்கத்தின் பெயரை கெடுக்காதீர்!
நான் பிரிட்டனுக்கு பயணம் செய்ய உள்ளதை ஒட்டி, மேற்கு வங்கத்தின் பெயரை வெளிநாட்டில் கெடுக்கும் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். என்னை நீங்கள் அவமானப்படுத்தலாம், திட்டலாம். ஆனால், வெளிநாட்டில் மேற்கு வங்கத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி செய்யாதீர்கள். இந்த பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கானது.
மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்,, திரிணமுல் காங்கிரஸ்