வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய சொகுசு கார்கள் பறிமுதல்
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய சொகுசு கார்கள் பறிமுதல்
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய சொகுசு கார்கள் பறிமுதல்
ADDED : மார் 21, 2025 12:15 AM

பெங்களூரு:வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட கார்களை, பெங்களூரில் இயக்கி வரி ஏய்ப்பு செய்தவர்களிடம் இருந்து, 250க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசிக்கும் முக்கிய புள்ளிகள், புதுச்சேரி, கோவா, டில்லி, மஹாராஷ்டிரா உட்பட வெளி மாநிலங்களில் சொகுசு கார்கள் வாங்குகின்றனர். அங்கேயே பதிவும் செய்து கொள்கின்றனர்.
அங்கிருந்து பெங்களூருக்கு கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். இதன் வாயிலாக வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
இதை தீவிரமாக கருதிய போக்குவரத்து துறை அதிகாரிகள், அவ்வப்போது சோதனை நடத்தி, வரி ஏய்ப்பு செய்யும் கார்களை பறிமுதல் செய்கின்றனர். உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர்.
இந்த வகையில், நேற்று முன்தினமும் பெங்களூரின் வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தி, 250க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
வழக்கு பதிவு செய்து கார்களின் உரிமையாளர்களிடம் 5 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் வசூலித்தனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
மோட்டார் வாகன சட்டப்படி வெளி மாநிலங்களில் வாங்கும் வாகனங்களை எந்த கட்டணமும் இன்றி, ஓராண்டுக்கு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அதன் பின், எந்த மாநிலத்தில் வாகனம் இயக்கப்படுகிறதோ, அந்த மாநிலத்துக்கான சாலை வரி செலுத்தி மறு பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் வரி ஏய்ப்பு செய்து பயன்படுத்துவதால், நம் மாநிலத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரி இழப்பு ஏற்படுகிறது.
இத்தகைய கார்களை கண்டுபிடித்து, 250க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வசப்படுத்தினோம். இது தொடர்பாக 400 வழக்குகள் பதிவாகி 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் வசூலித்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.