ராம பக்தர்கள் சென்ற ரயில் பெட்டியை எரிப்பதாக மிரட்டல் போராட்டத்துக்கு பின் அடாவடி ரயில்வே ஊழியர் கைது
ராம பக்தர்கள் சென்ற ரயில் பெட்டியை எரிப்பதாக மிரட்டல் போராட்டத்துக்கு பின் அடாவடி ரயில்வே ஊழியர் கைது
ராம பக்தர்கள் சென்ற ரயில் பெட்டியை எரிப்பதாக மிரட்டல் போராட்டத்துக்கு பின் அடாவடி ரயில்வே ஊழியர் கைது
ADDED : பிப் 24, 2024 04:57 AM

ஹொஸ்பேட், : முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் ஏறியதால், ரயில் பெட்டிக்கு தீ வைப்பதாக ராம பக்தர்களை மிரட்டிய ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில், கடந்த மாதம் 22ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுதும் இருந்து, அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி அயோத்தியில் இருந்து, மைசூருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, விஜயநகரா ஹொஸ்பேட் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. ராம பக்தர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்த, எஸ் 2 ரயில் பெட்டியில், வேறு மதத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஏறினர்.
அப்போது ராம பக்தர்கள், 'இது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி. முன்பதிவில்லாத பெட்டிக்கு சென்று ஏறுங்கள்' என கூறி உள்ளனர். இதற்கு அந்த நான்கு பேரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ராம பக்தர்களுக்கும், நான்கு பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த நான்கு பேரும், ராம பக்தர்களை பார்த்து, 'இந்த ரயில் பெட்டி என்ன, உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? அதிகமாக பேசினால், ரயில் பெட்டியை தீவைத்துக் கொளுத்தி விடுவோம்' என்று மிரட்டி உள்ளனர்.
ராம பக்தர்கள், நான்கு பேரையும் மடக்கிப் பிடித்து, ஹொஸ்பேட் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்யாமல், போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராம பக்தர்கள் போராட்டம் நடத்தினர். ஹொஸ்பேட் ஹிந்து அமைப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து, அங்கு வந்த விஜயநகரா எஸ்.பி., ஸ்ரீஹரிபாபு, மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இரண்டு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
ராம பக்தர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக, ரயில்வே சி குரூப் ஊழியரான ஷேக் கான், 37, என்பவர் கைது செய்யப்பட்டார். “ஹொஸ்பேட் ரயில் நிலையத்தில் ஏறி, குண்டகல் நிலையத்தில் இறங்க இருந்தேன். ஆனால் ராம பக்தர்கள் வேண்டும் என்றே தகராறு செய்தனர்,” என, ஷேக் கான் கூறி உள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.