குழந்தை தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை: ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி உறுதி
குழந்தை தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை: ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி உறுதி
குழந்தை தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை: ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி உறுதி
UPDATED : ஜூலை 18, 2024 04:40 PM
ADDED : ஜூலை 18, 2024 04:31 PM

புதுடில்லி: 'நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டு, கொத்தடிமைகளாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிறார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு உறுதியளித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டு, டில்லியில் கொத்தடிமைகளாக பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்ட 1,000 சிறார்களை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவில், ‛‛ பெரும்பாலான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, முதலாளியுடன் தங்கியிருக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சிறார்களின் உடல்நலம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற வழக்குகளில் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீட்பு நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் கட்டளையிடுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மாநில அரசு வழக்கறிஞர் சந்தோஷ் குமார் திரிபாதி: நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரருடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. அதிகாரியுடன் அவர் எந்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டு, கொத்தடிமைகளாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிறார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: அனைத்து விவகாரங்களையும் ஒரே மாதிரி கையாள முடியாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் வெவ்வேறு நடவடிக்கை தேவை. நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளை நம்புவோம். அரசு, மற்ற துறைகளுடன் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும். இதற்கு முழுமையான முன்னுரிமை அளிக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகளை ஈடுபடுத்தி, அதைச் செய்து முடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, டில்லி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.