"விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது": ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா கருத்து
"விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது": ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா கருத்து
"விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது": ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா கருத்து
ADDED : ஜூலை 18, 2024 12:36 PM

லக்னோ: 'மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது' என ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலே பாபா கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 2ம் தேதி, உத்தர பிரதேசத்தில், ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 121 பேர் உயிரிழந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவப்பிரகாஷ் மதுகர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அறிக்கையில் போலே பாபா பெயர் இடம்பெறவில்லை.
தப்ப முடியாது
இந்நிலையில், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், போலே பாபா பேசியதாவது: ஹாத்ரஸில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மிகவும் கவலை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உடன் நாங்கள் துணை நிற்கிறோம். மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. விதியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
விசாரணை கமிஷன்
அனைவரும் ஒரு நாள் இறக்க நேரிடும். நிகழ்ச்சி நடந்த போது 15க்கும் மேற்பட்டோர் நச்சு வாயுவை கூட்டத்தில் தெளித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர் என எங்கள் வழக்கறிஞர் கூறியது முற்றிலும் உண்மை. அவர் கூறியது போல் சதி நடந்துள்ளது. எனது மீது சிலர் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை வெளிவரும் மற்றும் சதி அம்பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.