வலகேரிஹள்ளியில் 200 பிளாட் மூன்று ஏக்கரில் பி.டி.ஏ., திட்டம்
வலகேரிஹள்ளியில் 200 பிளாட் மூன்று ஏக்கரில் பி.டி.ஏ., திட்டம்
வலகேரிஹள்ளியில் 200 பிளாட் மூன்று ஏக்கரில் பி.டி.ஏ., திட்டம்
ADDED : ஜன 31, 2024 05:16 AM
பெங்களூரு : வலகேரஹள்ளியில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம்திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, பி.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
மைசூரு சாலையில், ஆர்.வி., கல்லுாரி மற்றும் கெங்கேரி மத்திய பகுதியில் உள்ள, வலகேரிஹள்ளியில் ஏற்கனவே ஆறு கட்டங்களில், 2,700க்கும் மேற்பட்ட பிளாட்டுகளைக் கட்டி விற்பனை செய்யப்பட்டன.
இப்பகுதியில் பிளாட்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, ஏழாவது கட்டமாக மூன்று ஏக்கரில், 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.
பணிகளை துவக்க, டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் பெறும் ஒப்பந்ததாரர்கள், பி.டி.ஏ., நிர்ணயித்த 81 கோடி ரூபாயில், இரண்டு ஆண்டுகளில் பிளாட்டுகளை கட்டி முடிக்க வேண்டும். பிப்ரவரி 5ல் டெண்டர் திறக்கப்படும். அதன்பின் ஆய்வு செய்து தகுதியானவரிடம் பணிகள் ஒப்படைக்கப்படும்.
பணி உத்தரவு கடிதம் கொடுக்க, ஒரு மாதமாகலாம். மார்ச்சில் பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளோம். ஏழாம் கட்டத்தில் இரண்டு பிளாக்குகள் இருக்கும்.
ஒவ்வொரு பிளாக்கிலும் 10 மாடிகள் கொண்டிருக்கும். ஒன்றாவது பிளாக்கில், 100 பிளாட்டுகள் இருக்கும். இரண்டு படுக்கை அறைகளுடன், ஒரு படிக்கும் அறை கொண்டிருக்கும். இரண்டாவது பிளாக்கில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட, 100 பிளாட்டுகள் இருக்கும்.
இரண்டு பிளாக்குகளில், பேஸ்மென்ட் மற்றும் மேற்பகுதியில் மொத்தம் 200 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி செய்யப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பு 33.6 மீட்டர் உயரம் இருக்கும். 2027ன் துவக்கத்தில், பிளாட்டுகள் தயாராகும். 2018ல் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட பிளாட்டுகள், 44 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. இம்முறை கட்டுமான செலவு அதிகரித்ததால், 60 லட்சம் ரூபாய்க்கு விற்க ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.