ஆம்புலன்சை டாக்சியாக மாற்றி மோசடி கேதார்நாத் சென்ற 2 டிரைவர்கள் கைது
ஆம்புலன்சை டாக்சியாக மாற்றி மோசடி கேதார்நாத் சென்ற 2 டிரைவர்கள் கைது
ஆம்புலன்சை டாக்சியாக மாற்றி மோசடி கேதார்நாத் சென்ற 2 டிரைவர்கள் கைது
ADDED : ஜூன் 18, 2025 12:25 AM
டேராடூன்: நோயாளிகளை ஏற்றிச் செல்வது போல ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தி, கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்களை முறைகேடாக அழைத்துச் சென்ற இரண்டு ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.
உத்தராகாண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.
சார்தாம் யாத்திரை துவங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
தரிசனம்
கரடுமுரடான மலைப்பகுதியில் பக்தர்கள் கூட்டத்தை தாண்டி கேதார்நாத் செல்வது அவ்வளவு எளிதல்ல. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து, விரைவாக கோவில் செல்லவே பக்தர்கள் விரும்புவர்.
இதை பயன்படுத்தி, அவசர மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்சில் பக்தர்களை ஏற்றிச் சென்ற இரண்டு ஓட்டுநர்கள் போலீசில் சிக்கி உள்ளனர்.
கடந்த 14ம் தேதி, ஹரித்வாரில் இருந்து கேதார்நாத் புறப்பட்ட பக்தர்கள் குழு, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்பியது. ஆம்புலன்சை, போலீஸ் நிறுத்தாது என்பதால் அதில் விரைவாக பயணிக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அவர்கள் அணுகினர். அதிக பணம் தருவதாகக் கூறியதால் ஓட்டுநர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஹரித்வாரில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு சைரன்களை அலறவிட்டபடி இரண்டு ஆம்புலன்ஸ்களும் பயணத்தை துவங்கியது.
அதிர்ச்சி
வழக்கமாக, ஹரித்வார் முதல் ரிஷிகேஷ், பியாசி, தேவ்பிரயாக், ஸ்ரீநகர், ருத்ரபிரயாக், தில்வாரா, ஆகஸ்ட்முனி, குப்தகாசி பாட்டா வரை கடுமையான போலீஸ் சோதனை இருக்கும். ஆனால், வருவது ஆம்புலன்ஸ் என்பதால், இரண்டு வாகனங்களையும் போலீசார் நிறுத்தவில்லை.
பக்தர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது கவுரிகுண்டில் இருந்து கேதார்நாத் செல்லும் வழியில் அவசரநிலை ஏற்பட்டாலோ, அனைத்து சோதனைச் சாவடிகளும் எச்சரிக்கப்படும்.
ஆனால், சோன்பிரயாக் போலீசாருக்கு இரண்டு ஆம்புலன்ஸ்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால், சைரன்கள் ஒலித்தபடி வேகமாக வந்த இரண்டு வாகனங்களை போலீசார் கண்டதும், அவற்றை தடுத்து நிறுத்தினர்.
ஆம்புலன்ஸ்களை நிறுத்தி விசாரித்தவர்களுக்கு உள்ளே அதிர்ச்சி காத்திருந்தது. நோயாளியை ஏற்றிச் செல்லும் வாகனத்தில், குளு, குளு ஏ.சி.,யை ஓடவிட்டபடி பக்தர்கள் இருந்தனர்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ஓட்டுநர்களை கைது செய்து அபராதம் விதித்தனர்.