ADDED : ஜூன் 18, 2025 12:28 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் மூடப்பட்ட சில பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில் ஏப்.,22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பஹல்காம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் பூங்காக்கள் மூடப்பட்டன.
இதையடுத்து தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியதால் காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கடந்த 14ல் ஜம்மு -மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தலா எட்டு பூங்காக்களை திறக்க உத்தரவிட்டிருந்தார். மற்ற பூங்காக்கள் படிப்படியாக திறக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்படி முதற்கட்டமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஹல்காமின் பெட்டாப்பள்ளத்தாக்கு பூங்கா மற்றும் பஹல்காம் சந்தை அருகேயுள்ள பூங்கா, வெரினாக், கோகர்னாக் மற்றும் அச்சாபால் தோட்டம், பதாம்வாரி பூங்கா, நைஜின் அருகேயுள்ள வாத்து பூங்கா, ஹஜ்ரத்பாலில் உள்ள தக்தீர் பூங்கா ஆகியவை நேற்று திறக்கப்பட்டன.
இதேபோல் ஜம்மு மண்டலத்தில் கதுவா பகுதியில் உள்ள சர்தால் மற்றும் தக்கார், ரியாசியில் உள்ள தேவிபின்டி, சியாத் பாபா, சுலா பூங்கா, தோடா பகுதியில் உள்ள குல்தான்டா, ஜெய் பள்ளத்தாக்கு பூங்கா, உதம்பூரின் பஞ்சேரி பூங்காவும் நேற்று திறக்கப்பட்டன.
பூங்காக்களை சுற்றி ஏராளமான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.