14 முதல் 4 நாள் மது விற்பனைக்கு தடை ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு
14 முதல் 4 நாள் மது விற்பனைக்கு தடை ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு
14 முதல் 4 நாள் மது விற்பனைக்கு தடை ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு
ADDED : பிப் 12, 2024 06:54 AM
பெங்களூரு: 'பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தல், ராஜ்யசபா தேர்தலை ஒட்டி, பிப்., 14 முதல் நான்கு நாட்களுக்கு மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளதால், எங்களுக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும், பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதி உள்ளனர்.
இம்மாதம் பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தல், ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி, வரும் 14ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு பெங்களூரில் மதுபான விற்பனைக்கு அரசும், தேர்தல் கமிஷனும் தடை விதித்து உள்ளது.
பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பொதுவாக காதலர் தினத்தில் மது விற்பனை அதிகமாக இருக்கும். இந்நாட்களில் இளைஞர்கள் அடிக்கடி உணவகங்கள், பப்களுக்கு வருவர். இதன் மூலம் கூடுதலாக 50 சதவீதம் வருமானம் அதிகரிக்கும்.
மாநில அரசு, தேர்தல் கமிஷனின் உத்தரவால், பெங்களூரு நகரில் உள்ள 3,700 நிறுவனங்கள் சிக்கலை சந்திக்கும். பெரும் இழப்பை ஏற்படும். மதுபான விற்பனை தடை தொடர்பான முடிவை அரசும், தேர்தல் கமிஷனும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ராவ் கூறியதாவது:
இத்தேர்தல்களில் ஓட்டு போட 16,000 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் அனைவரும் படித்தவர்கள், புத்திசாலிகள். அதிகாரிகள் உரிய முடிவு எடுக்க வேண்டும். உணவு மற்றும் மதுபான தொழிலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். திடீரென மதுவிலக்கு அமல்படுத்தினால், வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படும். இது எங்களுக்கு மட்டுமின்றி, அரசுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கூறினார்.