Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 5வது இடம்

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 5வது இடம்

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 5வது இடம்

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 5வது இடம்

ADDED : மார் 11, 2025 06:14 PM


Google News
Latest Tamil News
பெர்ன்: உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக, சுவிஸ் நாட்டு காற்று தரம் குறித்த தொழில்நுட்ப நிறுவன ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதேபோல் உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடில்லி முதலிடம் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யூ.ஏர் சார்பில் உலக காற்று தர அறிக்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலகின் 17 சதவீதம் நகரங்கள் மட்டுமே, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரமான காற்றினை கொண்டதாக உள்ளன. ஆஸ்திரேலியா, பகாமஸ், பார்பேடஸ், எஸ்டோனியா, கிரேனடா, ஐஸ்லாந்து, நியூசிலாந்து ஆகிய 7 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த பி.எம்.,2.5 மாசு அளவீடு கட்டுக்குள் இருக்கும் நாடுகளாக கண்டறியப்பட்டுள்ளன.

உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட், வங்கதேசம், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.

உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளது. அவை, அசாமின் பிர்னிஹத், டில்லி, முலான்பூர், (பஞ்சாப்) பரிதாபாத், லோனி, புதுடில்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர் நகர், ஹனுமன்கர் மற்றும் நொய்டா ஆகியவையாகும்.

அதேபோல, உலகின் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடில்லி முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இந்த பட்டியலில் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ம் ஆண்டில் 5வது இடத்திற்கு வந்துவிட்டது.

இந்தியாவில், குறிப்பாக அதன் நகரங்களில், காற்று மாசுபாடு ஒரு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. இதற்கு வாகன மாசுபாடு, தொழில்துறை மாசுபாடு, கட்டுமான தூசி, பயிர் எரிப்பு மற்றும் சமையலுக்கு உயிர்மம் பயன்படுத்துதல் போன்றவைகளே முக்கிய காரணிகள் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒன்டாரியா நகரம், மாசு மிகுந்த நகரம் என்றும், சியாட்டில் நகரம் மாசு குறைந்த நகரம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, தென் அமெரிக்க நாடுகளில் காற்று மாசு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் மிகவும் குறைவு என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் 138 நாடுகளில், 8954 இடங்களில் நிறுவப்பட்ட 40 ஆயிரம் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் உதவியுடன் இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக, ஐக்யூ ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறுகையில், ''நம்மிடம் புள்ளி விவரங்கள் உள்ளன. ஆனால் மாசு தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை,'' என்று தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us