குடிநீர் எடுக்க முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து பலி அமைச்சரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் எடுக்க முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து பலி அமைச்சரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் எடுக்க முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து பலி அமைச்சரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : மார் 14, 2025 06:47 AM

சாம்ராஜ்பேட்டை,: பெங்களூரு ஆனந்தபுரத்தில் குடிநீருக்காக, மோட்டாரை ஆன் செய்ய, மின் ஒயர்களுக்கு இணைப்பு கொடுக்கும் போது, மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.
இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சந்தித்த அமைச்சர் ஜமீர் அகமது கான், இறந்தவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆனந்தபுரம். குடிசைப்பகுதியான இங்கு நுாற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை 3:00 மணி அளவில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் இணைப்பில்லை
எந்த வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு இல்லை. எனவே, வீட்டின் அருகில் நிலத்தடியில் செல்லும் குடிநீர் பைப்பில், தாங்களாகவே துளையிட்டு, பைப் பொருத்தி உள்ளனர்.
அதிகாலை குடிநீர் வரும்போது, பைப்பில் மோட்டாரை இணைத்து, தங்கள் வீடு வரை பிளாஸ்டிக் குழாய் இணைப்பு கொடுத்துக் கொள்கின்றனர்.
மோட்டாரை ஆன் செய்ய, அருகில் உள்ள மின்கம்பத்தின் மின்சாரப் பெட்டியில் உள்ள ஒயரை, மோட்டார் ஒயருடன் இணைத்து குடிநீர் பிடித்துக் கொள்கின்றனர்.
இப்பகுதியில் செல்வி, 50, என்பவர் வசித்து வந்தார். 15 ஆண்டுகளுக்கு முன், இவரின் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது இரு மகன்கள், இரு மகள்களை, வீட்டு வேலை செய்து, காப்பாற்றி வந்துள்ளார்.
மின்சாரம் பாய்ந்தது
நேற்று காலை 5:30 மணிக்கு, குடிநீருக்காக மோட்டாரின் ஒயரை, மின்சார ஒயருடன் இணைக்கும் போது, மின்சாரம் பாய்ந்தது.
இதைப் பார்த்த அப்பகுதியினர், அவரை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள், மைசூரு சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் அதிகாலையிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் யாரும் கேட்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
அடிப்படை வசதிகளை வழங்குவதில் கூட, இத்தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான ஜமீர் அகமது கான் பாரபட்சம் காட்டுகிறார்.
இங்கு வசிப்போர் பெரும்பாலும் ஹிந்துக்கள், அதேவேளையில், அருகில் உள்ள திப்பு நகரில், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அங்குள்ளோரின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு உள்ளது.
* குடிசைப்பகுதி
எங்களுக்கு ஏன் இணைப்பு தரவில்லை என்று கேட்டால், உங்கள் பகுதி குடிசைப்பகுதி என்கின்றனர்.
ஏன், நாங்கள் ஓட்டு போடவில்லையா? இங்கு குடிநீர் இணைப்போ அல்லது நிலத்தடி சாக்கடை கால்வாய் வசதியோ இல்லை.
எங்கள் உயிரை பணயம் வைத்து தினமும் குடிநீர் எடுக்கிறோம். இன்று நடந்த சம்பவம் முதல் முறையல்ல. இதற்கு முன்னர், மூன்று முறை நடந்துள்ளன.
20 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருக்கும் ஜமீர் அகமது கான், ஒவ்வொரு முறை தேர்தல் பிரசாரம், விழாக்களுக்கு வரும் போதெல்லாம், எங்கள் பிரச்னையை கூறுவோம். அவரும் செய்து தருவதாகக் கூறுவார். ஆனால், இதுவரை செய்து தரவில்லை.
எங்கள் உரிமையைக் கேட்டு போராட்டம் நடத்தினால், அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்வோம் என்று போலீசார் மிரட்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த அமைச்சர் ஜமீர் அகமது கான், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தார்.
பின், அவர் கூறுகையில், ''இப்பகுதியில் சிலர் சட்ட விரோதமாக, மூன்று முதல் நான்கு மாடி கொண்ட குடியிருப்பை கட்டி உள்ளனர்.
குடிநீர் வரவில்லை என்பதால், மோட்டாருக்கான மின் இணைப்பை, சட்ட விரோதமாக மின்சாரத்தில் இணைத்து உள்ளனர். 15 நாட்களுக்கு முன்தான், காவிரி குடிநீர் இணைப்பு தருவதற்கான பூமி பூஜை செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் அனுபவிக்கும் வலியை, வெளிப்படுத்தி உள்ளனர். இன்று நடந்த சம்பவம் மீண்டும் நடக்காது,'' என்றார்.
புல் அவுட்
* முன்னுரிமை
சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெற்ற முதல் குடிநீர் வாரியம் என்ற பெருமை கிடைத்து உள்ளது. பிராண்ட் பெங்களூரு திட்டத்தின்படி பல முன்னெடுப்புகள் எடுத்து வரப்படுகின்றன. நிலையான நீர் மேலாண்மை, தரமான வாழ்க்கைக்கு பெங்களூரு முன்னுதாரணமாக இருக்கும்.
டி.கே.சிவகுமார்.
துணை முதல்வர்.