கடன் வாங்கிய பெண் வீட்டில் திருடிய பைனான்ஸ் ஊழியர்
கடன் வாங்கிய பெண் வீட்டில் திருடிய பைனான்ஸ் ஊழியர்
கடன் வாங்கிய பெண் வீட்டில் திருடிய பைனான்ஸ் ஊழியர்
ADDED : மார் 14, 2025 06:39 AM

ஹாவேரி: கர்நாடகாவில் அவசர சட்டம் கொண்டு வந்த பின்னரும், மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்களின் அராஜகம் முடிவுக்கு வரவில்லை. பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பணம், தங்க நகையை திருடி சென்றுள்ளனர்.
ஹாவேரி மாவட்டம், ரட்டிஹள்ளி தாலுகாவின், கடூர் கிராமத்தில் வசிப்பவர் சம்பவ்வா தளகட்டி, 40. இவரது குடும்பத்தினர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில், 50,000 ரூபாய் கடன் பெற்றனர்.
மாதந்தோறும் இரண்டு தவணை வட்டி கட்ட வேண்டி இருந்தது. அதன்படி தலா 1,250 ரூபாய் வீதம் கட்டினர். சம்பவ்வா வீட்டுக்கு வந்து, மைக்ரோ நிறுவன ஊழியர்கள் கடன் தவணையை வசூலித்து சென்றனர்.
நிறுவன ஊழியர் கடன் தவணையை வசூலிக்க, நேற்று முன்தினம் கடூர் கிராமத்துக்கு வந்தார். அப்போது சம்பவ்வாவும், அவரது மகளும் வயலுக்கு சென்றிருந்தனர்.
வீடு திறந்திருந்தது. சிறிது நேரம் பொறுத்திருந்த நிறுவன ஊழியர், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, பீரோவில் இருந்த 25,000 ரூபாயையும், தங்க கம்மலையும் எடுத்து சென்று உள்ளார். வயலில் இருந்து வீடு திரும்பிய சம்பவ்வா, வீட்டினுள் பீரோ திறந்து கிடந்ததையும், பணம், தங்க கம்மல் காணாமல் போனதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ரட்டிஹள்ளி போலீஸ் நிலையத்தில், சம்பவ்வா புகார் அளித்துள்ளார். போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.