ஈஸ்வரப்பா மீண்டும் பா.ஜ.,வில் இணைவாரா?
ஈஸ்வரப்பா மீண்டும் பா.ஜ.,வில் இணைவாரா?
ஈஸ்வரப்பா மீண்டும் பா.ஜ.,வில் இணைவாரா?
ADDED : ஜூலை 02, 2024 10:42 PM

பா.ஜ.,வின் மூத்த தலைவராக இருந்தவர் ஈஸ்வரப்பா. முன்னாள் துணை முதல்வரான இவர், லோக்சபா தேர்தலின்போது, தன் மகன் காந்தேஷுக்கு ஹாவேரியில், போட்டியிட சீட் வழங்காததால், ஷிவமொகாவில் சுயேச்சையாக களமிறங்கினார். தோல்வி அடைந்ததுடன், டிபாசிட் தொகையும் இழந்தார்.
அதுவும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு எதிராக போட்டியிட்டு, தோல்வி அடைந்தவர். கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி, ஆறு ஆண்டுகள் வரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
தேர்தலில் தோல்வி அடைந்துள்ள அவர், அரசியலில் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். வேறு கட்சியில் சேராமல் இருக்க முடிவு செய்துள்ளார்.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதனால் விரக்தி அடைந்து, காங்கிரசில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின், எம்.எல்.சி.,யாக நியமிக்கப்பட்டார்.
ஆனாலும், காங்கிரசின் செயல்பாடு பிடிக்காத அவர், லோக்சபா தேர்தலின்போது, மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார். பெலகாவியில் போட்டியிட்டு, எம்.பி.,யுமானார். கட்சி மேலிடத்திலும் மீண்டும் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார்.
அந்த வகையில், தானும் மீண்டும் பா.ஜ.,வில் இணையலாமா என்பது குறித்து, தன் குடும்பத்தினருடனும், நெருங்கிய ஆதரவாளர்களுடனும் ஈஸ்வரப்பா, சமீபத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார்.
அதே வேளையில், மீண்டும் பா.ஜ.,வில் இணையும்படி தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
கட்சியின் மாநில தலைவர், மேலவை எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், துணை முதல்வர் உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்த அவர், கட்சி விரோத செயலில் ஈடுபட்டது சரியில்லை என்று அவரது ஆதரவாளர்களே கூறி வருகின்றனர்.
மீண்டும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அவர் பா.ஜ.,வில் இணைவார் என்று அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். தேர்தலின்போது, அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள், தற்போது கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
அவர் பா.ஜ.,வில் இணைந்தாலும், இதற்கு முன்பு இருந்த செல்வாக்கும், கிடைத்த மரியாதையும் மீண்டும் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கும்.
ஈஸ்வரப்பாவின் முடிவை எதிர்பார்த்து பா.ஜ.,வினரும், அவரது ஆதரவாளர்களும் காத்திருக்கின்றனர்.
- நமது நிருபர் -