சென்னபட்டணா இடைத்தேர்தல் யோகேஸ்வருக்கு வாய்ப்பு?
சென்னபட்டணா இடைத்தேர்தல் யோகேஸ்வருக்கு வாய்ப்பு?
சென்னபட்டணா இடைத்தேர்தல் யோகேஸ்வருக்கு வாய்ப்பு?
ADDED : ஜூலை 02, 2024 10:41 PM

சென்னபட்டணா இடைத்தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, எம்.எல்.சி., யோகேஸ்வர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தது. மாண்டியா தொகுதியின் வேட்பாளராக குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், சென்னபட்டணா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இத்தொகுதியை தக்கவைத்துக் கொள்ள தேவகவுடா, குமாரசாமி திட்டமிட்டனர். தன் மகன் நிகிலை களமிறக்க குமாரசாமி முயற்சித்தார். ஆனால் முந்தைய தேர்தல் தோல்விகளால் துவண்டுள்ள நிகில், இடைத்தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார்.
இதை உணர்ந்த பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஷ்வர், டில்லியில் மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்து, 'நிகில் போட்டியிட்டால் வெற்றி பெற வைப்பேன். இல்லையென்றால் எனக்கு ஆதரவு தாருங்கள்' என, 'துாண்டில்' போட்டார்.
மாநில பா.ஜ., தலைவர்களும், சென்னபட்டணா இடைத்தேர்தலில் யோகேஸ்வரை களமிறக்குவது குறித்து ஆலோசித்து வந்தனர். யோகேஸ்வரும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுடன், இத்தொகுதியில் அதிகளவில் ஒக்கலிகர்கள் வசிக்கின்றனர்.
இத்தாலுகாவில் நீர்ப்பாசன திட்டம் அமலுக்கு வந்ததற்கு இவரின் பங்களிப்பு முக்கியமானது. பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, குமாரசாமியிடம் தோல்வியடைந்தார். இவருக்கு சீட் கொடுக்கப்பட்டால், பா.ஜ., - ம.ஜ.த., ஓட்டுகள் மூலம் சுலபமாக வெற்றி பெற்றுவிடுவார்.
வேட்பாளரை தேசிய தலைவர்கள் அறிவிக்காத நிலையில், ராம்நகர் மாவட்ட பா.ஜ., தலைவர், 'சென்னபட்டணா இடைத்தேர்தலில், யோகேஸ்வருக்கு சீட் கொடுக்க வேண்டும்' வலியுறுத்தி உள்ளார்.
இந்தத் தொகுதியை வென்று, லோக்சபா தேர்தலில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க துணை முதல்வர் சிவகுமார் திட்டமிட்டு வருகிறார். இதற்காக இந்தத் தொகுதியில் முகாமிட்டு, அரசு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
யோகேஸ்வரை நிறுத்தி, சிவகுமார், சுரேஷ் சகோதரர்களின் முகத்தில் மீண்டும் கரியை பூசுவதற்கு குமாரசாமியும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால் யோகேஸ்வருக்கு வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில், ம.ஜ.த., சார்பில் நிகில் குமாரசாமியும், பா.ஜ., சார்பில் யோகேஸ்வரும் போட்டியிட இரு கட்சி தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இத்தொகுதியின் வெற்றி, கூட்டணி கட்சிக்கு கவுரவம் அளிக்கும் விஷயம். எனவே, வேட்பாளர்களை தேர்வு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் விரைவில் ஆலோசனை நடத்துவர்.
மஞ்சுநாத்,
மாவட்ட தலைவர், ம.ஜ.த., ராம்நகர்
- நமது நிருபர் -