ADDED : ஜூன் 01, 2024 05:29 AM

புதுடில்லி : கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கு சற்று அதிகமாக இருக்கும் என பல அமைப்புகள், நிறுவனங்கள் கணித்து அறிவித்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத அளவில் 8.20 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டியுள்ளது.
இதையடுத்து, உலகின் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா தன்னை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பை, தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது.
அதில், 2023 - 24 நிதியாண்டின் நான்காம் காலாண்டில், வளர்ச்சி 7.80 சதவீதமாக இருந்தது என்றும், கடந்த முழு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 8.20 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. முந்தைய 2022 - 23ம் நிதியாண்டில் வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக புள்ளியியல் அலுவலகம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது: இந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டுவதற்கு, தயாரிப்புத் துறையின் சிறப்பான செயல்பாடுகளே முக்கிய காரணமாகும்.
மதிப்பின் அடிப்படையில், நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, நான்காம் காலாண்டில் 47.24 லட்சம் கோடி ரூபாயாகவும்; ஒட்டுமொத்த நிதியாண்டில் 173.82 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இது முறையே 43.84 லட்சம் கோடி ரூபாயாகவும்; 160.71 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.