ADDED : ஜூன் 01, 2024 06:33 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்தாண்டு போதுமான மழை பெய்யவில்லை. வறட்சி மக்களை வாட்டியது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மாநிலத்தின் 200 மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன. தண்ணீர் இல்லாததால், மாடுகளுக்கு தீவனம் விளைவிக்க முடியவில்லை.
மாடுகளை, குறிப்பாக காளைகளை வளர்க்க விவசாயிகளால் முடியவில்லை. குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். தற்போது மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பயிரிட தயாராகின்றனர். ஆனால் நிலத்தை உழுது, பதப்படுத்த காளைகள் இல்லை.
புதிதாக காளைகள் வாங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் விலை மிகவும் அதிகம் உள்ளது. இரட்டை காளைகளின் விலை ஒரு லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
மாடுகள் வாங்க வரும் விவசாயிகள், விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்து வாங்காமல் திரும்புகின்றனர். சிலர் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று மாடுகள் வாங்குகின்றனர்.