'உறைவிட பள்ளிகளுக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் பொருந்தும்'
'உறைவிட பள்ளிகளுக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் பொருந்தும்'
'உறைவிட பள்ளிகளுக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் பொருந்தும்'
ADDED : ஜூன் 01, 2024 04:44 AM
பெங்களூரு : 'கட்டாய கல்வி உரிமை சட்டம், உறைவிட பள்ளிகளுக்கும் பொருந்தும்,' என, கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மைசூரில் ஞானசரோவரா கல்வி அறக்கட்டளை சார்பில், உறைவிட பள்ளி நடத்தப்படுகிறது. இந்த பள்ளி முறைப்படி அனுமதி பெறாமல், விதிமீறலாக செயல்படுகிறது. எனவே இதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாலகிருஷ்ணப்பா, வில்லியம் யேசுதாஸ் ஆகியோர், கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்திருந்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள், 2016ன் டிசம்பர் 19ல் விசாரணைக்கு ஆஜராகும்படி, பள்ளி முக்கியஸ்தருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. 2017ன் ஜனவரி 12ல் 'ஷோகாஸ்' சம்மன் அனுப்பியது. இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம், 'எங்களுடையது உறைவிடப்பள்ளி. இது கட்டாய கல்வி உரிமை சட்ட எல்லைக்குள் வராது' என, கூறினர்.
அதே ஆண்டில் மற்றொரு சம்மன் அனுப்பிய அதிகாரிகள், 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர்களின் விபரங்களை, அப்லோட் செய்யவில்லையே ஏன்' என, கேள்வி எழுப்பினர். அதன்பின் மாவட்ட கல்வி அதிகாரியிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதிகாரியும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகி ஒருவர் ஆஜரானார். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாததால், ஒரு கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இது குறித்து, கேள்வி எழுப்பி பள்ளி நிர்வாகம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
விசாரணை நடத்திய நீதிமன்றம், 'கட்டாய கல்வி உரிமை சட்டம், உறைவிட பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த சட்டப்படி அனைத்து பள்ளிகளும் கல்வித்துறையில் பதிவு செய்து கொண்டு, அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் பெறவில்லை. கல்வித்துறை நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிதத்து சரிதான்' என, நேற்று தீர்ப்பளித்தது.