நெல்லுக்கான ஆதரவு விலை உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நெல்லுக்கான ஆதரவு விலை உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நெல்லுக்கான ஆதரவு விலை உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : ஜூன் 20, 2024 12:55 AM
புதுடில்லி, போதிய அளவுக்கு இருப்பு உள்ள நிலையிலும், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 117 ரூபாய் உயர்த்தி, குவின்டாலுக்கு 2,300 ரூபாயாக நிர்ணயிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைந்த பின், அதன் முதல் அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:
கடந்த 2018 மத்திய பட்ஜெட்டின்போது, எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, உற்பத்தி செலவைவிட 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிப்பது என்ற கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நடப்பு 2024 - 2025 காரிப் சந்தைப்படுத்துதல் காலத்தில், நெல் உள்பட, 14 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
சி.ஏ.சி.பி., எனப்படும் வேளாண் உற்பத்தி செலவு மற்றும் விலை நிர்ணய கமிஷன் அளித்த பரிந்துரைகளின்படி, இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 5.35 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அதாவது, ஒரு குவின்டாலுக்கு 117 ரூபாய் உயர்த்தி, 2,300 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது.
சாதாரண ரக நெல்லுக்கு, குவின்டாலுக்கு 2,300 ரூபாயும், ஏ ரக அரிசிக்கு 2,320 ரூபாயும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.
இந்திய உணவு கழகத்திடம் தற்போது 5,340 கோடி கிலோ அரிசி கையிருப்பு உள்ளது. இது, ஜூலை 1 நிலவரப்படி அவசரத் தேவைக்கான இருப்பு மற்றும் ரேஷன் திட்டங்களுக்கு, ஒரு ஆண்டுக்குத் தேவையானதைவிட அதிகமாகும்.
ஜூன் 1 நிலவரப்படி பருவமழை, 20 சதவீதம் குறைவாக இருந்தாலும், அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேம்படும் என, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், இந்த ஆண்டுக்கான உணவுப் பொருள் உற்பத்தியில் பாதிப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது.