ADDED : ஜூன் 20, 2024 12:56 AM
புதுடில்லி, யு.ஜி.சி., நெட் தேர்வை ரத்து செய்து, மத்திய கல்வி அமைச்சகம் நேற்றிரவு அறிவித்துள்ளது.
நாட்டின் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்க, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு நாடு முழுதும், நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்வை, ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இந்நிலையில், தேர்வு நடந்து ஒரு நாளே ஆன நிலையில், யு.ஜி.சி., நெட் தேர்வை ரத்து செய்து, மத்திய கல்வி அமைச்சகம் நேற்றிரவு அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
ஜூன் 18ல் நடந்த யு.ஜி.சி., நெட் தேர்வில், முறைகேடு நடந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்வு செயல்முறையின் உயர்ந்த வெளிப்படைத்தன்மை மற்றும் புனிதத்தன்மையை உறுதி செய்ய, இந்த தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வேறொரு நாளில் புதிய தேர்வு நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு பின் வெளியிடப்படும். இந்த முறைகேடு குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,யிடம் விசாரணை ஒப்படைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை நடத்திய, 'நீட்' தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக, சமீபத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது அந்த அமைப்பு நடத்திய, யு.ஜி.சி., நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.