குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் உண்ணாவிரதம்: டில்லி அமைச்சர் ஆதிஷி
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் உண்ணாவிரதம்: டில்லி அமைச்சர் ஆதிஷி
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் உண்ணாவிரதம்: டில்லி அமைச்சர் ஆதிஷி
ADDED : ஜூன் 20, 2024 12:59 AM

புதுடில்லி, “டில்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன். இரு நாட்களில் இதற்கு தீர்வு காணாவிட்டால், நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்,” என, அமைச்சர் ஆதிஷி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில் வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல்வேறு இடங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் காலி குடங்களுடன் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, ஆம் ஆத்மி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டில்லிக்கு வழங்க வேண்டிய நீரை ஹரியானா வழங்கவில்லை. இதனால் டில்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு நாளைக்கு, 613 மில்லியன் கேலன்கள் நீரை டில்லிக்கு ஹரியானா வழங்க வேண்டும்.
ஆனால், 513 மில்லியன் கேலன்கள் நீரையே வழங்கியுள்ளது. இதன்படி, 28 லட்சம் பேருக்கு தேவையான நீரை அம்மாநிலம் வழங்கவில்லை.
டில்லியில், ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைக்கிற நிலையில், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். இரு நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “டில்லிக்கு ஹரியானா அரசு உபரிநீரை வழங்கி உள்ளது. இதற்கு போதுமான ஆதாரங்களும் உள்ளன. குடிநீரை கள்ளச்சந்தையில் ஆம் ஆத்மி அரசு கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்து வருகிறது.
“இந்த விவகாரத்தை திசைதிருப்ப, உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக, அதிஷி நாடகமாடுகிறார். மக்களுக்கு அடிப்படை தேவைகளை கூட வழங்காத ஆம் ஆத்மி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,” என்றார்.