கடும் வெயிலில் விமானத்துக்குள் 'ஏசி' இன்றி தவித்த பயணியர்
கடும் வெயிலில் விமானத்துக்குள் 'ஏசி' இன்றி தவித்த பயணியர்
கடும் வெயிலில் விமானத்துக்குள் 'ஏசி' இன்றி தவித்த பயணியர்
ADDED : ஜூன் 20, 2024 12:59 AM
புதுடில்லி, டில்லியில் கடும் வெப்பம் நிலவிவரும் நிலையில், அங்கு உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில் ஏசி ஒழுங்காக வேலை செய்யாததால் பயணியர் ஒரு மணி நேரம் அவதிக்குள்ளாயினர்.
டில்லியில் இருந்து நேற்று நண்பகல் பீஹாரின் தர்பங்காவிற்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்றது. விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பயணியர் அனைவரும் விமானத்தில் ஏறினர். கடும் வெப்பம் நிலவிய போதும், விமானம் புறப்படும் வரை ஏசியை இயக்கவில்லை என பயணியர் குற்றம்சாட்டினர்.
இதனால் விமானத்தின் உள்ளே பெண்கள், வயதானோர் உட்பட அனைவரும் புழுங்கி தவிப்பதையும், புத்தகம், நாளிதழ்களை வைத்து விசிறிக்கொள்வதையும் பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இது குறித்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அளித்த விளக்கம்:
டில்லி -- தர்பங்கா விமானம் நேற்று தாமதம் ஏதுமின்றி குறித்த நேரத்தில் இயக்கப்பட்டது. பயணியர் விமானத்திற்குள் வந்த போது ஏசி இயக்கத்திலேயே இருந்தது. வெளியே கடும் வெப்பம் நிலவியது. பயணியரின் வருகைக்காக விமானத்தின் இரு கதவுளும் திறந்திருந்தன.
ஏரோ பிரிட்ஜ் எனப்படும் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்ட வாயில் அந்த சமயம் இல்லை. இதனால் ஏசியின் செயல்திறன் குறைந்தது. விமானம் புறப்பட்டதும் இந்த பிரச்னை சரியானது. தர்பங்காவில் விமானத்தின் ஏசியை பரிசோதித்ததில் எந்த கோளாறும் இல்லை என்பது உறுதியானது.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.