அமைச்சருக்கு அனுமதி மறுப்பு பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்
அமைச்சருக்கு அனுமதி மறுப்பு பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்
அமைச்சருக்கு அனுமதி மறுப்பு பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்
ADDED : ஜூன் 20, 2024 12:54 AM

திருவனந்தபுரம் : குவைத் தீ விபத்தின் போது ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அந்நாட்டுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்காதது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதிஉள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா குவைத் சென்றிருந்தால், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர், அதிகாரிகள் குழு மற்றும் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள உதவியிருக்கும்.
இது, எதிர்பாராத சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மன நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்திருக்கும். இந்த விவகாரத்தில் அனுமதி அளிப்பது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்த பதிலும் கூறாதது துரதிருஷ்டவசமானது.
மாநில அமைச்சர் குவைத் செல்வதற்கு அனுமதி அளிக்காதது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இக்கட்டான நேரத்தில் சர்ச்சையை கிளப்புவது நோக்கமல்ல; அனுமதிக் கோரிக்கைக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்காததை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாவிட்டால் மாநில அரசு தனது கடமையில் தவறிவிடும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு வெளியுறவு அமைச்சகம் விரைந்து பதிலளிக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
துபாய், ஜூன் 20-
மேற்காசிய நாடான குவைத்தில் உள்ள மங்காப் நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இறந்த இந்தியர்களின் உடல்கள் தனி விமானம் வாயிலாக தாயகம் எடுத்து வரப்பட்டு, அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் பலியானோர் குடும்பத்தினருக்கு குவைத் அரசு தலா, 12.50 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக ௩ இந்தியர்கள், ௪ எகிப்தியர்கள், குவைத் நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட ௮ பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அஜாக்கிரதையால் மனித உயிர்கள் பறிபோக காரணமாக இருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.