ஓரே ஓடுபாதையில் இரு விமானங்கள் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
ஓரே ஓடுபாதையில் இரு விமானங்கள் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
ஓரே ஓடுபாதையில் இரு விமானங்கள் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 09, 2024 11:46 PM
மும்பை: மும்பை விமான நிலையத்தில், ஓடுபாதையில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அதே ஓடுபாதையில், இண்டிகோ விமானம் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில், கடந்த 8ம் தேதி, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம், மும்பையில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டது.
ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அதே ஓடுபாதையில், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இருந்து மும்பைக்கு வந்த இண்டிகோ நிறுவனத்தின் விமானம் தரையிறங்கியது.
ஒரே ஓடுபாதையில் இரு விமானங்களும் சிறிது இடைவெளியில் இயங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்ததை தொடர்ந்தே ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கியதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.
இதே போல், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்புதல்படியே, ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்டதாக, ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்தது.
இதற்கிடையே, இந்த சம்பவம் நடந்த போது பணியில் இருந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை, டி.ஜி.சி.ஏ., எனப்படும், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.