ADDED : ஜூன் 09, 2024 11:48 PM

இந்துார்: மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்தவர் ப்ரியல் யாதவ், 27; விவசாயி மகளான இவர், ம.பி., அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் ஆறாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து ப்ரியல் யாதவ் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். உறவினர்கள் நிர்பந்தம் காரணமாக பிளஸ் 1 வகுப்பில் விருப்பமின்றி இயற்பியல், வேதியியல், கணிதம் பாடத்தில் சேர்ந்தேன். ஆர்வம் இல்லாததால் பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தேன்.
அதுவே என் முதலும் கடைசியுமான தோல்வி. கடந்த 2019ல் நடந்த ம.பி., அரசுப் பணியாளர் தேர்வில் 19ம் இடம் பிடித்து மாவட்ட பதிவாளர் பணிக்கு தேர்வானேன். அதன் பின், 2020ல் தேர்வு எழுதி 34வது இடத்தில் தேர்ச்சி பெற்று கூட்டுறவுத்துறையின் உதவி கமிஷனர் ஆனேன்.
கடந்த 2021ல் ம.பி., அரசுப் பணியாளர் தேர்வு எழுதினேன். இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில், ஆறாம் இடத்தில் தேர்ச்சி பெற்றதால், துணை கலெக்டர் பணி கிடைத்துள்ளது.
யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., ஆவதே என் லட்சியம்.
இவ்வாறு அவர் கூறினார்.