Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சி.பி.ஐ., அதிகாரியாக நடித்து ரூ.85 லட்சம் மோசடி

சி.பி.ஐ., அதிகாரியாக நடித்து ரூ.85 லட்சம் மோசடி

சி.பி.ஐ., அதிகாரியாக நடித்து ரூ.85 லட்சம் மோசடி

சி.பி.ஐ., அதிகாரியாக நடித்து ரூ.85 லட்சம் மோசடி

ADDED : ஜூன் 09, 2024 11:45 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

விசாகப்பட்டினம்: தனியார் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் என்று கூறி, 85 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சந்தேகம்


ஒரு தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்த அதிகாரி, சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு நிறுவனத்தில் இருந்து, பணப் பயன்கள் கிடைத்தன.

அவருடைய வங்கிக் கணக்கில், 85 லட்சம் ரூபாய் வந்து சேர்ந்த அடுத்த நாள், 'ஸ்கைப்' எனப்படும் சமூக இணையதளம் வாயிலாக, ஒருவர் தொடர்பு கொண்டார்.

தன்னை சி.பி.ஐ., அதிகாரி என்று கூறிக் கொண்ட அவர், அந்த தனியார் நிறுவன அதிகாரி மீது, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சில புகார்கள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அவருடைய வங்கிக் கணக்கில் சமீபத்தில் வந்த, 85 லட்சம் ரூபாய் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே, தன் உயர் அதிகாரி என்று, மற்றொருவரை, அந்த வீடியோ கான்பரன்ஸ் இணைப்பில் இணைத்துள்ளார்.

இருவரும் சேர்ந்து தனியார் நிறுவன அதிகாரியிடம் விசாரணை நடத்திஉள்ளனர்.

எந்த குற்றமும் செய்யவில்லை என்று தனியார் நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.

ஆனால், சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவர்கள் மிரட்டியுள்ளனர். விசாரணை நடத்துவதற்கு வசதியாக,தாங்கள் கூறும் ஒரு வங்கிக் கணக்கில், 85 லட்சம் ரூபாயை செலுத்தும்படியும், விசாரணைக்குப் பின், திருப்பி தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதை நம்பி, விசாகப்பட்டினத்தில் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில், காசோலை வாயிலாக, 85 லட்சம் ரூபாயை தனியார் நிறுவன அதிகாரி செலுத்தியுள்ளார்.

அது, டில்லியில் உள்ள, 'ரானா கார்மென்ட்' என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

எச்ச ரிக்கை


அதன்பின், அந்த வங்கிக் கணக்கில் இருந்து, 105 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுஉள்ளது.

இரண்டு நாட்களுக்குப் பின், தான் ஏமாற்றப்பட்டதை தனியார் நிறுவன அதிகாரி உணர்ந்துள்ளார்.

அவர் அளித்த புகாரை, விசாகப்பட்டினம் குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டில்லி போலீஸ், ரானா கார்மென்ட்ஸ் அலுவலகத்துக்கு சென்றபோது, அங்கு வேறொரு நிறுவனம் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

சி.பி.ஐ., அதிகாரிகள் என்று கூறி, அந்தக் கும்பல் மோசடி செய்தது தெரியவந்து உள்ளது. இதுபோன்ற மோசடிகாரர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி, விசாகப்பட்டினம் போலீஸ் கூறியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இதுபோல், 300 கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் மோசடி புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us