மரபணு மாற்று கடுகு விதை பரிசோதனை: இரு வேறு தீர்ப்பு
மரபணு மாற்று கடுகு விதை பரிசோதனை: இரு வேறு தீர்ப்பு
மரபணு மாற்று கடுகு விதை பரிசோதனை: இரு வேறு தீர்ப்பு
ADDED : ஜூலை 24, 2024 02:14 AM

புதுடில்லி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.எச்., - 11 வகை கடுகு விதை உற்பத்தி மற்றும் சோதனைக்கு அளிக்கப்பட்ட அனுமதி தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இருவேறு தீர்ப்பை அளித்துள்ளது.
நம் நாட்டில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.எச்., - 11 வகை கடுகு விதை உற்பத்தி மற்றும் அந்த விதைகளை களத்தில் பயிரிட்டு பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2022ல் ஒப்புதல் அளித்தது.
அனுமதி
அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு அளித்த அனுமதியை தொடர்ந்து இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
'மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிட அனுமதி அளித்தால் சுற்றுச்சூழல் மாசுபடும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சஞ்சய் கரோல் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதி நாகரத்னா அளித்த தீர்ப்பில், 'அனுமதி தொடர்பாக, மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு நடத்திய கூட்டத்தில், சுகாதாரத்துறை உறுப்பினர்கள் பங்கேற்காதது விதிமீறல்' என, தெரிவித்தார்.
பாதுகாப்பு
நீதிபதி சஞ்சய் கரோல் அளித்த தீர்ப்பில், மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழுவின் முடிவில் எந்த தவறும் இல்லை என்று கூறியதுடன், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளின் கள பரிசோதனைகளை கடுமையான பாதுகாப்புடன் நடத்தும்படி உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை அளித்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன் வைத்து, உரிய அமர்வு தீர்ப்பளிக்கும்படி அமர்வு உத்தரவிட்டது.
அதே நேரம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் வகைகள் குறித்து தேசிய கொள்கை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுவதில், இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.