கவர்னர் மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒடிசா சட்டசபையில் அமளி
கவர்னர் மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒடிசா சட்டசபையில் அமளி
கவர்னர் மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒடிசா சட்டசபையில் அமளி
ADDED : ஜூலை 24, 2024 02:13 AM
புவனேஸ்வர், ஒடிசாவில் அரசு அதிகாரியை தாக்கிய மாநில கவர்னரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சியினர் போர்க்கொடி துாக்கியதால், நேற்றும் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
ஒடிசாவில், முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கவர்னராக ரகுபர் தாஸ் பதவி வகிக்கிறார்.
தலைநகர் புவனேஸ்வரில் கவர்னர் மாளிகை இருப்பது போல, புரி மாவட்டத்திலும் கவர்னர் மாளிகை உள்ளது. பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பங்கேற்க வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, புரியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில சட்டசபை விவகாரத்துறையின் உதவிப்பிரிவு அதிகாரி வைகுந்த் நாத் என்பவர் செய்தார்.
அப்போது, புரி ரயில் நிலையத்திற்கு கவர்னரின் மகன் லலித்குமாரை ஏற்றிச் செல்ல சொகுசு காரை அனுப்பாமல், சாதாரண காரை அனுப்பியதாக அவரும், அவரது பாதுகாவலர்களும் வைகுந்த் நாத்தை சரமாரியாக தாக்கினர். இதில், அவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து வைகுந்த் நாத், கவர்னர் ரகுபர் தாசின் முதன்மை செயலர் சாஸ்வத் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதிய நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, அவர் மாநில உள்துறைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, ஒடிசா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியபோது, எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை கையிலெடுத்தனர்.
நேற்றும், இரண்டாவது நாள் சபை நடவடிக்கை துவங்கியபோது, எதிர்க்கட்சி தலைமை கொறடா பிரமிளா மாலிக், இந்த விவகாரம் குறித்து முதல்வர் மோகன் மஜி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, கவர்னரின் மகன் லலித் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபையை முற்றுகையிட்டு, பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் ஒன்றுதிரண்டு முழக்கமிட்டனர். இதன் காரணமாக சபை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.