பள்ளி மைதானங்களில் கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க தடை
பள்ளி மைதானங்களில் கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க தடை
பள்ளி மைதானங்களில் கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க தடை
ADDED : ஜூலை 19, 2024 05:40 AM
மங்களூரு : 'கல்வி நிறுவனங்களில், கல்வி அல்லாத செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது' என தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தட்சிண கன்னடாவின், மங்களூரு பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் கல்வி நிறுவனத்தில், கல்வி சாராத செயல்பாடுகள் நடத்த அனுமதி அளிக்க கூடாது என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
'ஒரு வேளை, கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்தால், அந்தந்த கல்வி நிறுவன நிர்வாகம் பொறுப்பாளி ஆக்கப்படும்' என, எச்சரித்தார்.
ஹிந்து அமைப்பு
எனவே கல்வி நிர்வாகத்தினர், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க மறுத்தன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்தன.
நடப்பாண்டு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என, தட்சிண கன்னடா மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு:
பள்ளி, கல்லுாரி வளாகங்கள், மைதானங்களில் கல்வி சாராத எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்க கூடாது. அரசு, அரசு நிதியுதவி பெறும், பெறாத பள்ளி, கல்லுாரிகளுக்கு, இந்த உத்தரவு பொருந்தும்.
முக்கியஸ்தர்
நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு, கல்வித்துறைக்கு கோரிக்கைகள் அனுப்ப கூடாது. உத்தரவை மீறினால், அந்தந்த பள்ளி, கல்லுாரி முக்கியஸ்தரே பொறுப்பாளி ஆக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இது குறித்து, பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா கூறியதாவது:
தட்சிணகன்னடா மாவட்டத்தின், பெரும்பாலான அரசு பள்ளி மைதானங்களில், ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். ஆனால் இம்முறை கல்வித்துறை பிறப்பித்த உத்தரவால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு, இடையூறு ஏற்பட்டுள்ளது.
அரசு இந்த உத்தரவை உடனடியாக, திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.