எம்.எல்.சி., வரவேற்பு பேனர் விழுந்து மூன்று பேர் படுகாயம்
எம்.எல்.சி., வரவேற்பு பேனர் விழுந்து மூன்று பேர் படுகாயம்
எம்.எல்.சி., வரவேற்பு பேனர் விழுந்து மூன்று பேர் படுகாயம்
ADDED : ஜூலை 23, 2024 06:11 AM

ராய்ச்சூர்: காங்கிரஸ் எம்.எல்.சி.,யாக பதவியேற்ற பின், முதன் முறையாக தொகுதிக்கு வந்த பசனகவுடா பத்ரேலியை வரவேற்று, அவரது ஆதரவாளர்கள் வைத்திருந்த 'பிளக்ஸ் பேனர்' விழுந்ததில், வாகன ஓட்டிகள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடகா எம்.எல்.சி.,யாக பசனகவுடா பத்ரேலி, ஜூலை 11ல் பதவியேற்றார். பதவியேற்ற பின், முதன்முறையாக தன் மாவட்டமான ராய்ச்சூரின் சிந்தனுாருக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார். அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
அவரை வரவேற்று, அவரது ஆதரவாளர்கள் நகரின் நீதிமன்றம் அருகில் சாலையில் இரு பக்கமும் 'மெகா சைஸ்' வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.
சாலையின் இரு பக்கமும் இணைக்கும் வகையில் வளைவு வடிவத்தில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலையில், இந்த பேனர் திடீரென சாய்ந்தது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த இரு சாக்கர வாகன ஓட்டிகள் வீராபுரா யமனப்பா, அம்பம்மா, சிட்டிபாபு மீது விழுந்தது.
படுகாயம் அடைந்த அவர்கள், உடனடியாக தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுபோன்று பெங்களூரில் சில நாட்களுக்கு முன், யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் பிறந்த நாளை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர் விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவர் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் 'கோமா' நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சாலையில் விழுந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றிய காங்கிரஸ் தொண்டர்கள். இடம்: சிந்தனுார், பெலகாவி.