போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதி
போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதி
போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதி
ADDED : ஜூலை 23, 2024 06:12 AM

பெங்களூரு: ''நாளுக்கு நாள், போலி டாக்டர்களின் தொல்லை அதிகரிக்கிறது. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கர்நாடக மேலவையில் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் எச்சரித்தார்.
கர்நாடக மேலவையில், நேற்று நடந்த விவாதம்:
காங்., - திப்பண்ணா கனகனுார்: கலபுரகியில் போலி டாக்டர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அமைச்சர் தினேஷ் குண்டுராவ்: கர்நாடகாவில் போலி டாக்டர்கள் அதிகரிப்பது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இது கவலைக்குரிய விஷயம்தான். இதை கட்டுப்படுத்துவது, அரசின் பொறுப்பு. போலி டாக்டர்களை கைது செய்தாலோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலோ, நமது மக்கள் பிரதிநிதிகள், எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஆயுர்வேதிக், அலோபதி கிளினிக் நடத்தும் போலி டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முற்பட்டால், எங்களுக்கு நெருக்கடி வருகிறது. ஆனால் நாங்கள் விடமாட்டோம். போலி டாக்டர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று தருவோம்.
அலோபதி டாக்டர்கள் தங்களின் மருத்துவமனை முன் நீல நிறத்திலும்; ஆயுர்வேத மருத்துவமனை நடத்துவோர் பச்சை நிறத்திலும் போர்டுகள் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் போலியான டாக்டர்களை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். போலியான டாக்டர்களை கண்காணிக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திப்பண்ணா: கலபுரகி மாவட்டத்திலேயே, 23 போலி டாக்டர்கள் உள்ளனர். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் அவர்கள் கிளினிக் திறக்கின்றனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.
தினேஷ் குண்டுராவ்: நீங்கள் என்ன கேட்க வேண்டுமானாலும், ஆவணங்கள் வைத்துக் கொண்டு கேளுங்கள். போலி டாக்டர்கள் கிளினிக் திறந்தால், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி போலீசாருக்கு, இப்போதே உத்தரவிடுகிறேன். எந்த காரணத்தை கொண்டும், போலி டாக்டர்களை மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.