'நீட்' தேர்வு நடைமுறையில் தோல்வி இல்லை: உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்
'நீட்' தேர்வு நடைமுறையில் தோல்வி இல்லை: உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்
'நீட்' தேர்வு நடைமுறையில் தோல்வி இல்லை: உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்
ADDED : ஜூலை 16, 2024 12:59 AM

புதுடில்லி: 'இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு, ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையின் தோல்வி அல்ல; தேர்வை குறை கூறுவதற்காக அரங்கேற்றப்பட்ட சதி' என, சி.பி.ஐ.,தெரிவித்துள்ளது.
கடந்த மே 5ல் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள், தேர்வுக்கு முன் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ஆள்மாறாட்டம் உட்பட பல்வேறு மோசடிகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஆறு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது.
பட்டியல்
விசாரணையின் விரிவான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., சமர்ப்பித்துள்ளது.
அது குறித்து சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:
வினாத்தாள் வெளியானது எப்படி, எப்போது வெளியானது, எவ்வளவு நேரம் அது வெளியே சுற்றி வந்தது, அதனால் பலன் அடைந்தவர்கள் யார் என்பது குறித்து, 100 சதவீத உறுதியான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.
இதனால் பலன் அடைந்தோர் பட்டியலை, வரும் 17ம் தேதி விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். பலன் அடைந்தோர் எண்ணிக்கை, 100க்கும் குறைவாகவே உள்ளது.
எங்கள் இறுதி விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதன் பின் நீதிமன்றம் முடிவெடுக்கும்.
குற்ற செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இந்த முறைகேடுகளில் ஈடுபடவில்லை.
சில தனிநபர்களே இதை செய்துள்ளனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட சிலரும் உடனடியாக பிடிபட்டனர். இதனால் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
மேலும், வினாத்தாள் அச்சிடப்படும் அச்சகங்கள் பாதுகாப்பானது என்பதையும் உறுதி செய்துள்ளோம். அதன் வழியே வினாத்தாள்கள் கசியவில்லை.
நோட்டீஸ்
ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையையும் சீர்குலைக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை ஒருங்கிணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக் கோரி, தேர்வு முகமையான என்.டி.ஏ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.