கெஜ்ரிவால் எடை 2 கிலோ குறைவு: திஹார் சிறை அதிகாரிகள் விளக்கம்
கெஜ்ரிவால் எடை 2 கிலோ குறைவு: திஹார் சிறை அதிகாரிகள் விளக்கம்
கெஜ்ரிவால் எடை 2 கிலோ குறைவு: திஹார் சிறை அதிகாரிகள் விளக்கம்
ADDED : ஜூலை 16, 2024 01:06 AM

புதுடில்லி: டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் 8.5 கிலோ எடை குறைந்துள்ளதாகவும், அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், திஹார் சிறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிறை நிர்வாகம் சார்பில், டில்லி அரசின் உள்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அவர் இதுவரை, 2 கிலோ மட்டுமே எடை குறைந்துள்ளார். அவரது எடை, 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறுவது உண்மை அல்ல.
கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்த உணவுதான் சிறையில் வழங்கப்படுகிறது. ஆனால் அவர், ஜூன் 3ம் தேதி முதல் அதில் பாதி உணவை திருப்பி அனுப்பி விடுகிறார்.
அவரது மனைவி சுனிதா, மருத்துவக் குழுவினரிடம் தினமும் ஆலோசனை நடத்துகிறார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீரிழிவு நோய்
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் கூறியதாவது:
கெஜ்ரிவால் உடல் எடை குறைந்து இருப்பதை, திஹார் சிறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். கெஜ்ரிவாலை சிறையிலேயே நீண்ட மாதங்களுக்கு அடைத்து வைத்து, அவரது உடல்நிலையை சீர்குலைக்க பா.ஜ., சதி செய்கிறது.
நீரிழிவு குறைபாடுள்ள கெஜ்ரிவாலுக்கு தேவையான மருத்துவ வசதி சிறையில் கிடைக்கவில்லை. அவர் தூங்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் கோமா நிலைக்குக் கூட செல்லலாம் அல்லது மூளைச்சாவு அடையலாம். அதைத்தான் பா.ஜ., எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.