பலத்த காற்றுடன் கனமழை மரங்கள் விழுந்து வீடுகள் சேதம்
பலத்த காற்றுடன் கனமழை மரங்கள் விழுந்து வீடுகள் சேதம்
பலத்த காற்றுடன் கனமழை மரங்கள் விழுந்து வீடுகள் சேதம்
ADDED : ஜூலை 16, 2024 01:04 AM

திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன், இடைவிடாத கனமழை பெய்து வருவதால், ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் வீடுகள் சேதமடைந்தன.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மலப்புரம், கண்ணுார், காசர்கோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு நேற்று அதி கனமழைக்கான 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டிருந்தது.
கோட்டயம் மாவட்டத்தில் அதிகாலை முதல், கனமழையுடன் பலத்த காற்று வீசி வருவதால், மரங்கள் விழுந்து வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. கோழிக்கோடு கிராமப் பகுதிகளிலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு, எர்ணாகுளம், வயநாடு ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டாவில் உள்ள மூழியார் அணையின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.