பெட்ரோலுக்கு பணமா? ஊழியர் மீது காரை ஏற்றிய போலீஸ்
பெட்ரோலுக்கு பணமா? ஊழியர் மீது காரை ஏற்றிய போலீஸ்
பெட்ரோலுக்கு பணமா? ஊழியர் மீது காரை ஏற்றிய போலீஸ்
ADDED : ஜூலை 16, 2024 12:56 AM
கண்ணுார்: கேரளாவில் பெட்ரோல் நிரப்பியதற்கான கட்டணத்தை கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் மீது, காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த போலீஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் கண்ணுாரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் போலீஸ் வாகனத்திற்கு, அதன் டிரைவர் சந்தோஷ் குமார் என்பவர் நேற்று முன்தினம் பெட்ரோல் நிரப்பினார். எனினும், அதற்குரிய கட்டணத்தை செலுத்தாமல், வாகனத்தை எடுத்து செல்ல சந்தோஷ் குமார் முயன்றார்.
இதைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர் அனில், அவரை தடுத்து நிறுத்தி பெட்ரோல் நிரப்பியதற்கான பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் சந்தோஷ் குமார் பணம் தராததுடன், அந்த ஊழியர் மீது காரை ஏற்றி மோத முயற்சித்தார்.
அப்போது, அந்த காரின் பானெட் மீது பெட்ரோல் பங்க் ஊழியர் அனில் நிலை தடுமாறி விழுந்துள்ளார். இதை பயன்படுத்தி சந்தோஷ் குமார் காரை வேகமாக ஓட்டத் துவங்கினார்.
பயத்தில் அலறிய பெட்ரோல் பங்க் ஊழியர் அனில், காரை நிறுத்துமாறு கூறியும் தொடர்ந்து வேகமாக இயக்கியுள்ளார். 1 கி.மீ., தொலைவு சென்றபின் சந்தோஷ்குமார் காரை நிறுத்தி உள்ளார். இதில், காயமடைந்த அனில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பான கண்காணிப்பு வீடியோக்களை ஆய்வு செய்த போலீசார், தவறிழைத்த போலீஸ் டிரைவர் சந்தோஷ் குமாரை கைது செய்தனர். அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.