ரேஷன் ஊழியருக்கு செருப்பு மாலை: பொருட்களை பதுக்கியதால் ஆவேசம்
ரேஷன் ஊழியருக்கு செருப்பு மாலை: பொருட்களை பதுக்கியதால் ஆவேசம்
ரேஷன் ஊழியருக்கு செருப்பு மாலை: பொருட்களை பதுக்கியதால் ஆவேசம்
ADDED : ஜூன் 26, 2024 12:05 AM

தும்கா,ஜார்க்கண்டில் ரேஷன் பொருட்களை நான்கு மாதங்களாக வழங்காமல் பதுக்கி வைத்திருந்த பெண் ஊழியருக்கு, அப்பகுதி மக்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முற்றுகை
இங்கு, தும்கா மாவட்டத்தின் மாதுபன் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக ரேஷன் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என புகார் எழுப்பினர்.
இந்நிலையில், நேற்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அங்குள்ள ரேஷன் கடையை முற்றுகையிட்டு முழக்கமிட்டதுடன், அங்கு பணியாற்றும் பெண் ஊழியருக்கு செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இத்துடன், கோவிந்த்பூர் - சாஹேப்கஞ்ச் இடையேயான மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் செய்து கலைந்து போகச் செய்தனர்.
விரிவான விசாரணை
இதற்கிடையே, பொதுமக்களின் புகாரையடுத்து ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாதுபன் கிராமத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் அனுப்பப்பட்டது தெரியவந்தது.
ஆனால், ரேஷன் கடையில் பணியாற்றிய அந்த பெண், கடந்த மாதம் 60 சதவீதமும், இந்த மாதம் 7 சதவீதம் மட்டுமே உணவுப் பொருட்கள் வினியோகித்து மீதமுள்ளவற்றை பதுக்கியது தெரியவந்தது.
இதையடுத்து, இது குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.