Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சபாநாயகராக தேஜ., கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு

சபாநாயகராக தேஜ., கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு

சபாநாயகராக தேஜ., கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு

சபாநாயகராக தேஜ., கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா தேர்வு

UPDATED : ஜூன் 26, 2024 12:42 PMADDED : ஜூன் 25, 2024 11:01 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா 2வது முறை தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பெரும்பான்மை கிடைக் காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், லோக் சபாவின் தலைவர் பதவி இதுவரை இல்லாத முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நிபந்தனை


ஆளுங்கட்சி அல்லது கூட்டணியின் உறுப்பினரே சபாநாயகர் பதவிக்கு வருவது வழக்கம். அந்த வகையில், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை ஒருவழியாக சரிகட்டி, தன் வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜ., திட்டமிட்டது. முந்தைய காலங்களை போல இப்போதும் போட்டி இல்லாமல் ஒரு மனதாக தேர்வு செய்ய விரும்பியது.

'உங்கள் கட்சிக்காரர் சபாநாயகராக வர நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு தர வேண்டும்' என இண்டியா அணி நிபந்தனை விதித்தது. இது ஏற்கனவே பின்பற்றப்பட்ட மரபு தான். மோடி முதல் முறை பிரதமர் ஆனபோது, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை துணை சபாநாயகர் ஆனார். ஆனால், பா.ஜ., சம்மதிக்கவில்லை. 'அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்; முதலில் சபாநாயகர் தேர்வை முடிப்போம்' என்று கூறியது. இண்டியா அணி ஏற்கவில்லை. அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு ஆகியோர் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மூன்று முறை சந்தித்து பேசினர்.

நேற்று காலையில் கார்கேவை அவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டபோது, ''காங்., அமைப்புச் செயலர் கே.சி.வேணுகோபாலிடம் பேசிக் கொள்ளுங்கள்,'' என சொல்லிவிட்டார்.

வேணுகோபாலை ராஜ்நாத் சந்தித்தபோது, தி.மு.க., மூத்த எம்.பி., பாலுவும் சேர்ந்து கொண்டார். 'துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர இப்போதே பா.ஜ., உறுதிமொழி அளித்தால் தான், சபாநாயகர் தேர்வை ஒருமனதாக நடக்க விடுவோம்' என வேணுவும், பாலுவும் திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதை பிரதமருடன் பேசிவிட்டு சொல்வதாக ராஜ்நாத் கூறிச் சென்றார்.

சபாநாயகர் பதவிக்கு ஒருவேளை போட்டியிட யாராவது விரும்பினால், நேற்று மதியம் 12:00 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர் குறித்த விபரங்களும், ஆதரவு தீர்மானங்களும் லோக்சபா செயலகத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். ராஜ்நாத் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த நேரம் நெருங்கியதால், பார்லிமென்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சந்தேகம்


சபைக்குள் எம்.பி.,க்கள் உறுதிமொழி ஏற்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 'டெட்லைன்' நெருங்கிவிட்டதால் மூத்த தலைவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.திடீரென இண்டியா கூட்டணி தலைவர்கள் சிலர், சபையை விட்டு அவசரமாக வெளியேறினர். நண்பகல் வரை நேரத்தை கடத்தினால், சபாநாயகர் தேர்வில் போட்டி இல்லாமல் செய்துவிடலாம் என பா.ஜ., முயற்சி செய்வதாக இண்டியா அணிக்கு சந்தேகம் எழுந்ததாக தெரிகிறது.

அதை முறியடிக்க, கேரளாவைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ், சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆதரவு தீர்மான விபரங்களை வேகமாக தயார் செய்து லோக்சபா செயலகத்தில் ஒப்படைத்தனர். இவர் எட்டாவது முறையாக லோக்சபாவுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மூத்த உறுப்பினர். தற்காலிக சபாநாயகராக இவரைத்தான் ஜனாதிபதி நியமிப்பார் என இண்டியா அணி எதிர்பார்த்தது.

ஆளும் தரப்பில் பழைய சபாநாயகர் ஓம் பிர்லாவே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆதரவு தீர்மான விபரங்களை மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, குமாரசாமி மற்றும் நட்டா ஆகியோர் ஒன்றாக சென்று அளித்தனர். அப்போது தான் சுரேஷ் ஏற்கனவே களம் இறங்கிவிட்டார் என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

இருதரப்புமே தங்கள் நிலையிலிருந்து சிறிதும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பது தெளிவானது. பிரதமர் அளித்த பேட்டி மற்றும் அதற்கு இண்டியா அணி கொடுத்த பதில்கள் ஆகியவற்றால் நேற்று முன்தினம் உருவான இறுக்கமான சூழல் தீவிரமானதை காண முடிந்தது.

ஆலோசிக்கவில்லை


காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ''நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு தரப்பட்டது. இப்போது கேட்டால் பிறகு பேசிக்கொள்ளலாம்; முதலில் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தாருங்கள் என்கின்றனர். பிரதமரின் வாக்குறுதிகள் பற்றி நமக்கு நன்றாக தெரியுமே. எப்படி நம்ப முடியும்?'' என்றார்.

'துணை சபாநாயகர் பதவியை விட்டுத்தருவதாக பா.ஜ., அறிவித்தால், சுரேஷ் வேட்பு மனுவை வாபஸ் பெற நாங்கள் தயார்' என வேணுகோபால் மற்றும் தீபேந்தர் ஹூடா தெரிவித்தனர்.

இந்த களேபரத்தின் நடுவில் மேற்கு வங்கத்தில் இருந்து மம்தா ஒரு வெடிகுண்டை வீசினார். ''சுரேஷை வேட்பாளராக அறிவிப்பது குறித்து காங்கிரஸ் எங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே அவரை ஆதரிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை,'' என, திரிணமுல் எம்.பி., அபிஷேக் பானர்ஜி சொன்னார். ஆனால், இன்று காங்கிரஸ் அறிவித்த வேட்பாளரை ஆதரிப்போம் என அக்கட்சி அறிவித்தது.

தேர்வு


இன்று (ஜூன் 26) லோக்சபா துவங்கியதும் சபாநாயகரை தேர்வு செய்யும் பணி துவங்கியது. ஓம்பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதனை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, குமாரசாமி உள்ளிட்ட 15 பேர் வழிமொழிந்தனர். காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை அக்கட்சி எம்.பி., பிரேமசந்திரன் முன்மொழிந்தார். கனிமொழி உள்ளிட்ட 3 பேர் வழிமொழிந்தனர்.

வாழ்த்து


குரல் ஓட்டெடுப்பு மூலம், சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் கைகுலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மோடியும், ராகுலும் கைகுலுக்கி கொண்டனர். பிறகு இருவரும் ஓம்பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதன் பிறகு இருவரும், சபாநாயகரை வாழ்த்தி பேசினர்.

துணை சபாநாயகர்

சபாநாயகர் தேர்தல் முடிந்த நிலையில், அடுத்து கட்சிகளின் கவனம் துணை சபாநாயகர் பதவியை நோக்கி திரும்பி உள்ளது. இந்தப் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ., விட்டுக் கொடுக்குமா அல்லது தே.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளர் வேட்பாளர் களமிறங்குவாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us