ரூ.70 லட்சம் மின் கட்டண பாக்கி ஹம்பியில் மின்னொளி நிகழ்ச்சி ரத்து
ரூ.70 லட்சம் மின் கட்டண பாக்கி ஹம்பியில் மின்னொளி நிகழ்ச்சி ரத்து
ரூ.70 லட்சம் மின் கட்டண பாக்கி ஹம்பியில் மின்னொளி நிகழ்ச்சி ரத்து
ADDED : ஜூன் 26, 2024 12:39 AM

விஜயநகரா, கர்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில் அமைந்துள்ளது ஹம்பி. விஜயநகர பேரரசு காலத்தில் செல்வ செழிப்பாக விளங்கிய புராதன சின்னங்கள் நிறைந்த இப்பகுதி, 'யுனெஸ்கோ'வின் அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில் 2022ல், 'ஹம்பி உலக பாரம்பரிய பகுதி நிர்வாக ஆணையம்' சார்பில், 'ஹம்பி ஆன்லைட்' என்ற திட்டத்தின் கீழ், முக்கிய சின்னங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டன.
இதன்படி, விருபாக் ஷா கோவில் கோபுரம், நரசிம்மர் கோவில், துங்கபத்ரா குகை, அச்சுதாரயா கோவில், வராஹா கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், இசை நிகழ்ச்சியுடன் மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டது.
அதுபோன்று, பசவண்ணர் மண்டபம், கோதண்டராமா கோவில், ஹம்பி பஜார் மண்டபத்தில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, இசையுடன் கூடிய மின் விளக்கு நிகழ்ச்சி தினமும் இரவு 7:00 மணி முதல் 9:30 மணி வரை நடந்தது.
இதை, 'இன்னோவேடிவ் லைட்டிங் சிஸ்டம்' நிறுவனம், கர்நாடக சுற்றுலா துறை, ஹம்பி உலக பாரம்பரிய பகுதி நிர்வாக ஆணையம் ஆகியவை இணைந்து பராமரித்து வருகின்றன.
கடந்த இரண்டு மாதமாக, இரவு நேர இசை மற்றும் மின் விளக்கு நிகழ்ச்சி நடத்தப்படாமல் உள்ளது. இதை பார்க்க வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்து, திரும்பி செல்கின்றனர்.
இது குறித்து விசாரித்த போது, குல்பர்கா மின் வினியோக நிறுவனத்துக்கு, 70 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, 'இன்னோவேடிவ் லைட்டிங் சிஸ்டம்' நிறுவன முதன்மை செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:
மாதந்தோறும் எங்களின் பங்கு மின் கட்டணத்தை செலுத்தி வருகிறோம். இசை மற்றும் மின் விளக்கு நிகழ்ச்சிக்காக, 500 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு; 250 கிலோ வாட் திறன் கொண்ட மூன்று என மொத்தம் ஐந்து டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.
தினமும் இரவு 6,000 சுற்றுலா பயணியர், இந்நிகழ்ச்சியை ரசித்து வருகின்றனர். இசையுடன் கூடிய மின் விளக்கு அலங்கார பொறுப்பை, மாவட்ட நிர்வாகமே எடுத்து கொண்டது குறித்து எங்களுக்கு தெரியவில்லை.
அதே வேளையில், பருவமழை துவங்கி உள்ளதால், வெளிப்பகுதியில் உள்ள மின் விளக்கு அலங்காரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இசை, மின் விளக்கு நிகழ்ச்சியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் கட்டணத்தை செலுத்திய பின்னரும், சுற்றுலா துறை, ஹம்பி உலக பாரம்பரிய மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், இன்னும் பில் தொகையை செலுத்தவில்லை என்பது தெரிகிறது.