Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ உச்சத்துக்கு சென்றது தக்காளி விலை கருவேப்பிலை ஆனது காய்கறி

உச்சத்துக்கு சென்றது தக்காளி விலை கருவேப்பிலை ஆனது காய்கறி

உச்சத்துக்கு சென்றது தக்காளி விலை கருவேப்பிலை ஆனது காய்கறி

உச்சத்துக்கு சென்றது தக்காளி விலை கருவேப்பிலை ஆனது காய்கறி

ADDED : ஜூலை 13, 2024 10:35 PM


Google News
புதுடில்லி:ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்ததால், தலைநகர் டில்லியில் காய்கறி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. தக்காளி இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளதால் டில்லிவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

தலைநகர் டில்லியில் இந்த ஆண்டு கோடைக் காலத்தில் கடும் வெப்பம் நிலவியது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறி தோட்டங்கள் தண்ணீரின்றி கருகின. இதையடுத்து, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி டில்லியில் விற்கின்றனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை காரணமாக ஏராளமான தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் டில்லிக்கு காய்கறி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, காலி பிளவர், முட்டைக்கோஸ் ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்தது. டில்லியில் இப்போது தக்காளி மொத்த விலை கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உள்ளூர் ரகம் 28 கிலோ கொண்ட ஒரு பெட்டி 1,200 ரூபாய்க்கும், ஹைபிரிட் ரகம் 1,400 முதல் 1,700 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

சில்லறை விலையில் 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட காய்கறிகள் இப்போது 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாயாக எகிறியுள்ளது. .

கர்நாடகா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டுமே டில்லிக்கு தக்காளி வருகிறது. மஹாராஷ்டிராவில் இருந்து காய்கறி வரத்து ஆகஸ்ட் 15க்குப் பின் வரத்துவங்கும். அதன்பிறகே, டில்லியில் காய்கறி விலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காய்கறி விலை எதிர்பாராத வகையில் விலை உயர்ந்ததால் ஏராளமானோர் தங்கள் காய்கறி பயன்பாட்டைக் குறைத்துள்ளனர். லட்சுமி நகரைச் சேர்ந்த சரிதா, “இப்போது காய்கறி வாங்கு அளவை மிகவும் குறைத்து விட்டேன். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் வாங்க முடியாத அளவுக்கு காய்கறி விலை உச்சத்துக்கு சென்று விட்டது. உணவில் காய்கறியை கருவேப்பிலை போல பயன்படுத்த துவங்கியுள்ளேன்,”என்றார்.

மெஹ்ராலி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்திருந்த தீபக், “நான் வழக்கமாக 200 முதல் 300 ரூபாய் வரை காய்கறி வாங்கினால் ஒரு வாரத்துக்கு இருக்கும். ஆனால் இப்போது இரண்டு நாட்களுக்குத்தான் வருகிறது. மற்ற நாட்களில் காய்கறி இல்லாத உணவு வகைகளைப் பற்றி யோசிக்கத் துவங்கி விட்டோம்,”என்றார்.

காய்கறி விலை உச்சத்துக்கு சென்றதையடுத்து டில்லியின் பல ஹோட்டல்களில் உணவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில ஹோட்டல்களில் நிலையான விலைப்பட்டியல் உள்ளது. அதன் உரிமையாளர்கள், 'இந்த காய்கறி விலை உயர்வால் நாங்களும் திடீரென விலைப் பட்டியலை திருத்த முடியாது. எங்கள் ஹோட்டல்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த விலை உயர்வு எங்களுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது'என்றனர்.

கன்னாட் பிளேஸ் ஜென் ஹோட்டல் உரிமையாளரும், தேசிய ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க கவுரவ பொருளாளருமான மன்பிரீத் சிங், “நிரந்த விலைப் பட்டியல் கொண்ட ஹோட்டல்களுக்கு காய்கறியின் திடீர் விலை உயர்வு மிகப்பெரிய சவால். எங்கள் ஹோட்டலில் காய்கறி விலைக்கு ஏற்ப அடிக்கடி விலைப் பட்டியலை மாற்ற முடியாது. பல ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதால் எந்தப் பொருளையும் குறைவாக பயன்படுத்தி சமைக்க முடியாது,”என்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us