ADDED : ஜூன் 06, 2024 05:15 AM

ராம்நகர், : எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, தற்போது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யாகியுள்ளார். இவரால் காலியான சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், சுரேஷ் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
மாநில அரசியலில் இருந்த குமாரசாமி, மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யாகி, தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார். இவரால் காலியான சென்னபட்டணா சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தொகுதியில் யார் களமிறங்குவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலில் தோற்ற சிவகுமாரின் தம்பி சுரேஷ், சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, மாகடி காங்., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கூறியதாவது:
சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில், சுரேஷ் போட்டியிடுவது குறித்து, அவரும், கட்சி மேலிடமும் முடிவு செய்யும். இடைத்தேர்தலில் சென்னபட்டணா, காங்கிரஸ் வசமாகும். அங்கு தலைவர்கள் இல்லாமல், 80,000 ஓட்டுகளை பெற்றுள்ளோம். வெற்றிக்கு இன்னும் 20,000 ஓட்டுகள் மட்டுமே தேவை.
இடைத்தேர்தலில் கூட்டணி வேலை செய்யாது. தொண்டர்களும் கூட கூட்டணியை ஏற்க மாட்டார்கள். குமாரசாமி இப்போது எங்கள் மாவட்டத்தில் இல்லை, மாண்டியாவுக்கு சென்று விட்டார். இனி சென்னபட்டணா, ராம்நகருக்கு வரமாட்டார். மாண்டியா, ஹாசனை பார்த்து கொண்டு இருப்பார்.
இவ்வாறு அவர்கூறினார்.